கல்வி என்பது சிலருக்கு எளிதான பயணமாக இருக்கலாம், ஆனால் பலருக்கு அது ஒரு நீண்ட போராட்டமாகும். திருப்பத்தூர் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் பிறந்து, வாழ்க்கையின் மிகக் கொடிய இழப்புகளை எதிர்கொண்டு, இன்று கல்வியின் வழியே முன்னேற முயற்சிக்கும் அருண் கனகராஜின் கதை, மன உறுதியின் சான்றாக விளங்குகிறது.
தொடர்ச்சியான இழப்புகளும் ஆதரவற்ற நிலையும்
அருண் கனகராஜின் ஆரம்பக்காலம் மகிழ்ச்சிகரமானதாகவே இருந்தது. அரசுப் பள்ளியில் பயின்ற அவர், தனது பத்தாம் வயதில் தாயாரை ஒரு விபத்தில் இழந்தார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் காலமான போது, அருண் முதன்முறையாக அந்த நகரைத் தரிசித்தார். தாயின் இழப்பைத் தாங்க முடியாமல் தவித்திருந்த நிலையில், சில ஆண்டுகளிலேயே தந்தையையும் ஒரு விபத்தில் இழந்தார். வியக்கத்தக்க மற்றும் வேதனையான விஷயம் என்னவென்றால், தாயார் சிகிச்சை பெற்று மறைந்த அதே மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில், அதே படுக்கையில் தந்தையும் சிகிச்சை பெற்று காலமானதே ஆகும்.
உறவுகளின் புறக்கணிப்பும் வாழ்வாதாரப் போராட்டமும்
பெற்றோரை இழந்த பிறகு, அருணும் அவரது சகோதரிகளும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இருப்பினும், காலப்போக்கில் குடும்ப உறவுகள் விரிசலடைந்தன. சொந்த வீட்டின் நிலம் மற்ற உறவினர்களுக்குப் பிரிபோய், தங்க வேண்டிய இடமில்லாத சூழல் உருவானது. சித்தப்பாவின் வீட்டில் தங்கியிருந்த போது, கல்விச் செலவுகளுக்காகவும் சிறு தேவைகளுக்காகவும் அருண் கடும் உழைப்பை மேற்கொண்டார். கனகாமரம் பூதோட்டங்களில் பூ பறித்ததும், வாழைத் தோட்டங்களில் உரம் இட்டும் தனது வாழ்வாதாரத்தைத் தேடினார். ஒரு கிலோ பூவிற்கு கிடைத்த சில ரூபாய்களும், உழைப்பிற்குப் பதிலாகக் கிடைத்த ஒரு சீப்பு வாழைக்காயும்தான் அந்த நாட்களின் பெரும் ஆதரவாக இருந்தது.
கனவுகளும் கண்ணீரும்
தன்னுடைய மூத்த சகோதரியின் உதவியால் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற அருண், உயர்கல்வியைப் பொறுத்தவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். ஜன்னல்கள் கூட இல்லாத ஒரு சிறிய வீட்டில், சகோதரியின் புடவையைத் திரையாகக் கட்டி மறைப்பு செய்துகொண்டு வாழ்ந்த நாட்கள் அவரது நினைவில் இன்றும் பசுமையாக உள்ளன. “நம்மால் இனி படிக்கவே முடியாது” என்று எண்ணி தினமும் கண்ணீர் விட்டு அழுத தருணங்கள் ஏராளம். படிப்பு என்பது ஒரு காலத்தில் விருப்பமாக இருந்தது, ஆனால் காலப்போக்கில் அது ஒரு பேராசையாக மாறியது.
கல்வியின் மீதான தீராத தாகம்
உதவிகளும் ஆதரவுகளும் குறைந்த நிலையில், உயர்கல்விக்கான வழிகாட்டுதல் இன்றி தவித்த அருணுக்கு, அகரம் அறக்கட்டளையின் தலையீடு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. வறுமை மற்றும் மன அழுத்தங்களுக்கு மத்தியிலும், கல்வியின் மீதான தனது தீராத தாகத்தினால் இன்று அவர் தனது வாழ்க்கையை மறுசீரமைத்துக் கொண்டுள்ளார். பெற்றோரின் அன்பை இழந்த அவருக்கு, சக நண்பர்களும் அவர்களின் குடும்பத்தினரும் தந்த ஆதரவு, அவரை மீண்டும் வாழ்க்கைப் பாதைக்குக் கொண்டு வந்தது.

Leave a Reply