மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, டெல்லி மாணவர் ஒருவரின் விடைத்தாள் தவறாகப் பதிவேற்றப்பட்டது. இந்தத் தவறைச் சுட்டிக்காட்டிய மாணவர், சமூக வலைதளங்களில் தேசவிரோதி என விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்போது சிபிஎஸ்இ வாரியம் தனது தவறை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.
விடைத்தாள் மாறியது குறித்து மாணவர் புகார்
டெல்லியைச் சேர்ந்த வேதாந்த் ஸ்ரீவஸ்தவா என்ற மாணவர், கடந்த மே 13 அன்று வெளியான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் இயற்பியல் பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றிருந்தார். இதில் அதிருப்தி அடைந்த அவர், தனது விடைத்தாள் நகல்களைக் கோரி மே 19 அன்று விண்ணப்பித்தார்.
மே 23 அன்று அவருக்குக் கிடைத்த விடைத்தாள் நகல்களை ஆய்வு செய்தபோது, அதில் உள்ள கையெழுத்து தனதுது அல்ல என்பதையும், வேறொரு மாணவரின் விடைத்தாள் தனது பதிவு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் கண்டறிந்தார். இது குறித்து அவர் ‘X’ சமூக வலைதளத்தில் தனது ஆங்கிலம் மற்றும் கணினி அறிவியல் பாட விடைத்தாள்களின் கையெழுத்துடன் ஒப்பிட்டுப் பதிவிட்டிருந்தார். தனது கடின உழைப்பு வீணாகிவிட்டதாக அவர் உருக்கமாக விவரித்திருந்தார்.
சமூக வலைதள விமர்சனங்களும் மன உளைச்சலும்
வேதாந்தின் இந்தப் பதிவு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அவரது கணக்கின் இருப்பிடம் ‘தெற்காசியா’ என்று குறிப்பிடப்பட்டிருந்ததைக் காரணமாகக் கொண்டு, சிலர் அவரைப் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், இந்தியக் கல்வி நிறுவனத்தைக் களங்கப்படுத்த முயல்கிறார் என்றும் கடுமையாக விமர்சித்தனர்.
இது குறித்து வேதாந்தின் தந்தை சஞ்சய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “என் மகன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானான். விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகு அவனால் சரியாகத் தூங்க முடியவில்லை. இந்தப் பிரச்சினையை வெளிப்படுத்தவே அவனுக்கு சமூக வலைதளக் கணக்கைத் தொடங்கினோம், ஆனால் அவன் தேசவிரோதி என முத்திரை குத்தப்பட்டது அவனது மனநிலையை பாதித்துள்ளது” என்று தெரிவித்தார்.
சிபிஎஸ்இ வாரியத்தின் ஒப்புதல்
மாணவரின் புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய சிபிஎஸ்இ வாரியம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விடைத்தாள் மாறியது உண்மை என்பதை ஏற்றுக்கொண்டது. இது குறித்து சிபிஎஸ்இ இணைச் செயலாளர் மாணவருக்கு அனுப்பிய மின்னஞ்சலில், தவறு நடந்ததை ஒப்புக்கொண்டு, சரியான விடைத்தாளைக் கொண்டு மதிப்பெண்கள் விரைவில் திருத்தப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், “நாங்கள் வேதாந்த் ஸ்ரீவஸ்தவாவைத் தொடர்பு கொண்டுள்ளோம். சரியான விடைத்தாள் நகல் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கேற்ப மதிப்பெண்கள் புதுப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
மதிப்பீட்டு முறையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘ஆன்-ஸ்கிரீன் மார்க்கிங்’ (OSM) என்ற டிஜிட்டல் மதிப்பீட்டு முறை, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் என்று வாரியம் குறிப்பிட்டிருந்தது. ஆனால், மங்கலான நகல்கள், விடுபட்ட பக்கங்கள் மற்றும் விடைத்தாள்கள் மாறுதல் போன்ற புகார்கள் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றன.
இந்தச் சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார். மறுமதிப்பீட்டு சேவைகளில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகளைச் சரிசெய்ய ஐஐடி மெட்ராஸ் மற்றும் கான்பூர் ஆகிய கல்வி நிறுவனங்களின் வல்லுநர்கள் குழு சிபிஎஸ்இக்கு உதவும் என்று அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply