சென்னையைச் சுற்றித் திட்டமிட்டு திடக்கழிவுகளை மேலாண்மை செய்யும் நோக்கில், பெருமளவு கழிவுகளை உருவாக்கும் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மாநகராட்சியின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று ஆணையாளர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
ரிப்பன் கட்டடத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன் கீழ் செயல்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசிக்கப்பட்டது. இதில், கழிவுகளை முறையாகப் பிரித்து வழங்குவதற்கும், அவற்றைச் செயலாக்குவதற்கும் உள்ள நெறிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
யாரெல்லாம் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்கள்?
திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-ன்படி, பின்வரும் அளவுகோல்களில் ஏதேனும் ஒன்றைக் கொண்ட நிறுவனங்கள் பெருமளவு கழிவு உற்பத்தியாளர்களாகக் கருதப்படுவார்கள்:
- 20,000 சதுர மீட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட மொத்தத் தளப்பரப்பளவு கொண்ட கட்டிடங்கள்.
- தினசரி 40,000 லிட்டர் அல்லது அதற்கு மேற்பட்ட நீர் பயன்பாடு கொண்ட நிறுவனங்கள்.
- தினசரி 100 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட திடக்கழிவுகளை உருவாக்கும் அமைப்புகள்.
இந்த வரையறையின் கீழ் வணிக வளாகங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் மற்றும் பெரிய குடியிருப்பு சங்கங்கள் ஆகியவை அடங்கும்.
15 நாட்கள் காலக்கெடு மற்றும் அபராதம்
தகுதியுள்ள அனைத்து நிறுவனங்களும் வரும் 15 நாட்களுக்குள் மாநகராட்சியின் இணையதளத்திலும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் இணையதளத்திலும் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவிற்குள் பதிவு செய்யத் தவறும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் எச்சரித்துள்ளார்.
விதிமுறைகளை மீறுபவர்களுக்குக் குறைந்தபட்சமாக ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் இத்தகைய விதிமீறல்களில் ஈடுபட்ட 120 நிறுவனங்களிடம் ரூ.5,95,000 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கழிவு மேலாண்மை நடைமுறைகள்
பெருமளவு கழிவுகளை உருவாக்குபவர்கள், தங்களுக்குத் தேவையான வண்ணக் குப்பைத்தொட்டிகளைத் தாங்களே கொள்முதல் செய்து, கழிவுகளைத் தொடக்க நிலையிலேயே தரம் பிரித்து வளாக நுழைவாயிலில் வைக்க வேண்டும். மக்கும் கழிவுகளை அந்தந்த வளாகங்களிலேயே உரமாக்கல் அல்லது உயிரி எரிவாயு தயாரித்தல் மூலம் செயலாக்க வேண்டும்.
உலர்கழிவு மற்றும் சுகாதாரக் கழிவுகளை மாநகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட முகமைகளிடம் ஒப்படைக்க வேண்டும். மேலும், கழிவு மேலாண்மை தொடர்பான பதிவேடுகளை முறையாகப் பராமரித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இணையதளத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
உதவி மையங்கள் மற்றும் வழிகாட்டுதல்
திருவொற்றியூர் முதல் சோழிங்கநல்லூர் வரையிலான 15 மண்டலங்களில் உள்ள பணியாளர்கள் மற்றும் தூய்மை இந்தியா இயக்கப் பரப்புரையாளர்கள், நிறுவனங்கள் இணையதளத்தில் பதிவு செய்யத் தேவையான உதவிகளை வழங்குவார்கள். கூடுதல் விவரங்களுக்கு மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் இணை ஆணையாளர் (சுகாதாரம்) திருமதி ஸ்ரேயா பி. சிங் மற்றும் வட்டாரத் துணை ஆணையாளர்களான திரு.எச்.ஆர்.கௌஷிக், திரு.அதாப் ரசூல் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply