வால்பாறையில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம்: தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அச்சத்தத்தில்

வால்பாறை சிறுத்தை

குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த சிறுத்தைகள்

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் சிறுத்தைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து வருவதால் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள வால்பாறை பகுதியில், சமீபகாலமாக காட்டு யானைகள், கரடிகள் மற்றும் சிறுத்தைகளின் நடமாட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்குள் பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் சிறுத்தைகள் ஊடுருவி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்களும், நடைபாதையில் செல்லும் பொதுமக்களும் பெரும் அச்சத்தோடு இயங்கி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகள்

சமீபத்தில் சோலையார் முடிஸ் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில், இரண்டு சிறுத்தைகள் ஒன்றையொன்று துரத்தி உலா வந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இந்த காட்சிகள் அப்பகுதி மக்களிடையே மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுத்தைகள் மனித குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் நடமாடுவது, உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்தாக அமையும் என்று மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வனத்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

நிலைமையை உணர்ந்த வனத்துறையினரும், வேட்டை தடுப்பு காவலர்களும் அந்தப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மாலை நேரங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்குமாறும், குறிப்பாகக் குழந்தைகளைத் தனியாக வெளியில் விளையாட அனுமதிக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றனர். வனத்துறை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கூண்டு வைத்து பிடிக்கக் கோரிக்கை

தொடர்ந்து சிறுத்தைகளின் நடமாட்டம் இருப்பதால், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிறுத்தைகளைப் பிடிக்கத் தேவையான கூண்டுகளை அமைத்து, அவற்றை வழிமறித்து பிடிக்குமாறு அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

#valparai #wildlife #coimbatore #forestDepartment #கோவை #வால்பாறை #குடியிருப்பு பகுதிகள் #சிறுத்தைகள் #உலா #பொதுமக்கள் அச்சம்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *