மசாஜ் நிலையங்களில் சிறுமிகள் பாலியல் சுரண்டல்: மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு

உச்ச நீதிமன்றம்

டெல்லி, ராஜஸ்தான், பீகார் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் இயங்கும் மசாஜ் நிலையங்கள் மற்றும் இசைக்குழுக்களில் சிறுமிகள் கட்டாயப்படுத்தி பணியமர்த்தப்பட்டு, பாலியல் ரீதியாகச் சுரண்டப்படும் விவகாரத்தை உச்ச நீதிமன்றம் மிகத் தீவிரமான பிரச்சினையாகக் கருதி வருகிறது. இது தொடர்பாக மத்திய மற்றும் மாநில அரசுகள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலக்கட்டத்தில் மட்டும், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள இசைக்குழுக்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதேபோல், டெல்லி மற்றும் ராஜஸ்தானில் உள்ள மசாஜ் நிலையங்களில் இருந்து ஏராளமான சிறுமிகள் மீட்கப்பட்ட விவரங்கள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

பொதுநல வழக்கு விசாரணை

‘ஜஸ்ட் ரைட்ஸ் ஃபார் சில்ட்ரன் அலையன்ஸ்’ என்ற தொண்டு நிறுவனம் தாக்கல் செய்த பொதுநல வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு மே 25 அன்று விசாரித்தது.

இந்த விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் எச்.எஸ்.பூல்கா வாதிடுகையில், “வறுமையில் வாடும் பழங்குடி மற்றும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த 10 முதல் 16 வயது வரையிலான சிறுமிகள், வேலைவாய்ப்பு மற்றும் திருமண ஆசையை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்படுகிறார்கள். பல சந்தர்ப்பங்களில், பெற்றோர்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக இந்த சிறுமிகள் மிகக் குறைந்த தொகைக்கு விற்கப்படுகிறார்கள்” என்று தெரிவித்தார்.

சட்ட ஓட்டைகளும் குற்றச் செயல்களும்

தற்போது இயங்கும் இசைக்குழுக்கள் மற்றும் மசாஜ் நிலையங்களில் இதுபோன்ற செயல்கள் நடைபெறவில்லை என்று உரிமங்கள் காட்டப்பட்டாலும், அந்தச் சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு குழந்தை கடத்தல் மற்றும் பாலியல் சுரண்டல் ஒரு திட்டமிடப்பட்ட குற்றத் தொழிலாக உருவெடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் குழந்தைகளின் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இது குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

#supremeCourt #childRights #humanRights #crimeNews #supremecourt #உச்சநீதிமன்றம் #bihar #பீகார் #டெல்லி #delhi

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *