என்னுடைய பெயர் அருண் கனகராஜ். நான் அகரம் 2015 விதை பேட்சை சேர்ந்தவன். திருப்பத்தூரில் இருந்து 24 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு குக்கிராமம் தான் என்னுடைய ஊர். அந்த கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வளர்ந்தவன் நான். எனக்கு ஒரு அக்கா, ஒரு தங்கச்சி இருக்கிறார்கள்.
பெற்றோர் இழப்பும் சவால்களும்
எனக்கு 10 வயது இருக்கும் போது அம்மாவுக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அவருக்கு நிறைய சிகிச்சை செய்தோம், ஆனால் முடியாமல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இறந்து விட்டார்கள். நான் முதல் முதலில் சென்னை வந்ததே அப்போது தான். அப்பா வெளிநாட்டில் இருந்தார். அம்மா இறந்ததுக்கு பிறகு அவர் திரும்பி வந்து ஊரிலேயே வேலை பார்த்தார். எனக்கு 12 வயது இருக்கும் போது அவரும் ஒரு விபத்தில் இறந்து விட்டார்.
நான் பையன் மட்டும் தான். இருந்தாலும் எனக்கு மேல என் அக்கா இருந்தாள். அவள் தான் என்னோட பாதி பாரத்தை சுமந்தாள். எங்களுக்கு சொந்த வீடு கிடையாது. எங்க அப்பா வீட்டில் பெரியவர் என்பதால் பரம்பரை வீட்டை தாத்தா கொடுத்தார். அம்மா விபத்துக்கு முன் எல்லாம் நன்றாக இருந்தது. எது கேட்டாலும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. அம்மா இறந்த பிறகு எல்லாமே மாறிப்போயிற்று.
பள்ளிப்படிப்பு முதல் உயர்கல்வி வரை
நான் 2ம் வகுப்பு படிக்கும்போதே வீடு கட்ட ஆரம்பித்தார்கள். நான்காம் வகுப்பு படிக்கும் போது சுமார் மோல்டிங் போட்டிருந்தார்கள். அந்த வீட்டில்தான் அம்மா வசித்தார்கள். அந்த நேரத்தில் ஊர் டவுனில் பிரைட் ரைஸ் கடை வைத்திருந்தோம். அப்பா தான் எங்களை பார்த்துக் கொண்டார், அக்காவை சமைக்க விடாமல் அவரே சமைப்பார். அம்மாவுக்கு நாங்கள் நன்றாக படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அம்மா இறந்ததுக்கு பிறகு, நானும் என் சகோதரிகளும் மீண்டும் அதே அரசுப் பள்ளியில் சேர்ந்தோம். சித்தப்பா வீட்டில் தங்கி படித்தேன். சின்ன செலவுகளுக்கு கனகாமரம் பூ தோட்டத்தில் பூ எடுக்க போவோம்; ஒரு கிலோவுக்கு 5 அல்லது 6 ரூபாய் கொடுப்பார்கள். பின்னர் வாழைத்தோட்டத்துக்கு எருவரைக்கு செல்வோம். அங்கு கிடைத்த வாழைக்காயுடன் வந்து சமைத்து சாப்பிட்டிருக்கிறோம். அம்மா அப்பாவின் ரேஷன் கார்டு இருந்தது; அதன் மூலம் அரிசி வாங்கி சாப்பிட்டோம்.
சித்தப்பா வீட்டில் இருந்து வெளியேறுதல்
அக்காவுக்கு கல்லூரி பீஸை முதலில் சித்தப்பா கட்டினார். பின்னர் அவரால் கட்ட முடியாது என்றதும், அவள் நண்பர்கள் உதவி செய்தனர். இப்படி எல்லோர் உதவியாலும் அவள் பிஏ இங்கிலிஷ் லிட்டரேச்சர் முடித்தாள். அதன் பிறகு மாமா ஒருவர் உதவியில் பிஎட் முடித்து 3,000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சென்றாள். நான் 12ம் வகுப்பு முடிக்கும் நிலையில் இருந்தேன். அதுவரை சித்தப்பா வீட்டில் இருந்தாலும், பிரச்சனை வரக்கூடாது என்று நாங்களே விலகினோம்.
சித்தப்பா எங்களை அப்பாவாக இருக்க மாட்டாரா என்று நிறைய நாட்கள் ஏங்கினேன். அவர் கட்டிப்பிடிக்க மாட்டாரா, தொட்டுப் பேச மாட்டாரா என்று எண்ணியிருக்கிறேன். அந்த கோபம் எனக்கு அவர் மீது இன்றும் இருக்கிறது. ஆனால், நாங்கள் சித்தப்பா வீட்டில் இருந்து வெளியே வந்து சொந்தமாக வாழ ஆரம்பித்தபோதுதான் சர்வைவல் புரிந்தது. அம்மா அப்பா இல்லாவிட்டாலும், ஒரு பையன் ஒழுக்கமாக வளர முடியும், நன்றாக படிக்க முடியும் என்று தெரிந்துக் கொண்டேன்.
தற்போதைய நிலையும் எதிர்காலமும்
12ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்லும் நேரத்தில், நாங்கள் தனியாக வந்துவிட்டோம். அக்காவுக்கு 3,000 ரூபாய் சம்பளம்; வீட்டில் ஜன்னல் கூட இல்லை. ஜன்னலுக்கு அவள் புடவையை தைத்து ஸ்கிரீன் போல போட்டோம். ரோட்டோரத்தில் இருந்த வீடு; யார் எப்போது பார்ப்பார்கள் என்று தெரியாது. கடினமான சூழ்நிலையிலும், நான் கல்லூரி படிப்புக்கு பணம் எப்படி கட்டுவது என்று கலங்கினேன். ஆனால் அகரம் அறக்கட்டளையின் உதவி கிடைத்தது. தற்போது நான் படித்து வருகிறேன், எதிர்காலத்தில் ஒரு நல்ல வேலை வாங்கி என் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய கனவு.

Leave a Reply