Tag: ஆர்எஸ் பாரதி

  • முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

    முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது: ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்

    முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மாதம் 20-ஆம் தேதி திருச்செந்தூரில் நடைபெற்ற கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய கருத்துக்கள் முதலமைச்சர் விஜய்க்கு அவதூறாக இருந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து ஆத்தூர் காவல்துறையினர் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

    உயர் நீதிமன்றத்தின் ஜாமின் மறுப்பு

    தொடர்புடைய வழக்கில் முன்ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒருவர் பொதுவெளியில் இத்தகைய கருத்துக்களைக் கூறுவது முறையா என்று கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு காவல்துறை அவரை கைது செய்துள்ளது.

    ஆர்.எஸ்.பாரதியின் எதிர்வினை

    சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, இந்த கைது நடவடிக்கையைச் சாடினார். உரையில் அவர் கூறியதாவது: “அவதூறு பேச்சு என்ற காரணத்திற்காக ஒரு முன்னாள் அமைச்சரை கைது செய்வது காட்டுமிராண்டித்தனமானது. இது சர்வாதிகாரத்தின் உச்சக்கட்டமாகும். சட்ட ரீதியாக இந்த விவகாரத்தை அணுகுவோம். தி.மு.க ஆட்சியில் அவதூறு வழக்குகளுக்காக யாரும் கைது செய்யப்பட்டதில்லை. தற்போதைய இந்த அராஜகத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம்” என்றார்.

    மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் ஏதும் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.

    அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேச்சுக்கு எதிர்ப்பு

    இதற்கிடையில், கரூரில் நடந்த சம்பவத்திற்கு தி.மு.கவே காரணம் என்று மாற்றுக்கட்சியினர் தவெக-வில் இணைந்த நிகழ்வில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார். இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆர்.எஸ்.பாரதி, கரூரில் உண்மையில் என்ன நடந்தது என்பது அந்த ஊர் மக்களுக்குத் தெரியும் என்றார். அமைச்சராக இருக்கும் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு மிகவும் கீழ்த்தரமானது மற்றும் பொறுப்பற்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

    குறிப்பபிாக, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்துக்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க சார்பில் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தொடர்புடைய செய்திகள்

    #tamilNaduPolitics #dmk #tvk #legalNews #anithaRadhakrishnan #rsBharathi #அனிதா ராதாகிருஷ்ணன் #ஆர்எஸ் பாரதி #திமுக