திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகன் இருவரும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இச்சம்பவத்தைக் கண்டித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கொலையின் பின்னணி
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த கும்பல், கார் மீது மோதவிட்டு பின்னர் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். இதில் ஐந்து வயது சிறுவன் கொல்லப்பட்டதோடு, தந்தையின் தலையை அரிவாளால் வெட்டித் துண்டித்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். நடுரோட்டில் இந்தச் சம்பவம் நடந்திருப்பதே பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சட்ட ஒழுங்கு குறித்து கனிமொழியின் விமர்சனம்
இந்தக் கொடூரக் கொலை குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில், “திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர் அருகே தந்தை மற்றும் அவரது ஐந்து வயது மகன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநிலத்தில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அவர், பொதுமக்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாக அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, தவெக அரசு இந்த விஷயத்தில் மெத்தனமாக இருக்கக் கூடாது என்றும், குற்றவாளிகளைத் தாமதமின்றி விரைவாகக் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அமைதி திரும்பக் கோரிக்கை
கொலை நடந்த பகுதியில் தற்போது நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று கனிமொழி தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Reply