குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கதாநாயகன் மற்றும் பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் மகேந்திரன், சமீபத்தில் தான் அளித்த நேர்காணல் குறித்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு நேர்காணல் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டது. அதில் அவர் தெரிவித்த சில கருத்துக்கள் மற்றும் வார்த்தை பயன்பாடுகள் பலரது கவனத்தை ஈர்த்ததுடன், கடுமையான விமர்சனங்களுக்கும் உள்ளானது. இந்த சூழலில், தனது விளக்கத்தை பதிவு செய்த வீடியோ ஒன்றை அவர் தற்போது வெளியிட்டுள்ளார்.
தவறான புரிதல்களுக்கான விளக்கம்
தனது வீடியோவில் பேசிய மகேந்திரன், “சமீபத்திய நேர்காணலில் நான் குறிப்பிட்ட சில பகுதிகள் தவறாக புரிந்துகொள்ளப்பட்டு, இன்ஸ்டாகிராம், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் யூடியூப் போன்ற தளங்களில் விமர்சிக்கப்பட்டதை கண்டது எனக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. நான் மதிப்பிற்குரிய பலரும் என்னைப் பற்றி தவறாகப் பேசியிருக்கிறார்கள். ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்த்தால், நான் சொல்ல வந்த கருத்து என்ன என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்” என்று தெரிவித்தார்.
மின்சாரத் தேவை குறித்து கேள்விகள் கேட்டது தொடர்பாக பேசிய அவர், தான் சில குறிப்பிட்ட நபர்களிடம் மட்டுமே ஆறு மாத கால அவகாசம் கேட்டதாகவும், பொதுமக்களிடம் அப்படிச் சொல்லவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். மேலும், அரசியல் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அந்த அவகாசம் கேட்டதாக அவர் குறிப்பிட்டார்.
கல்வி மற்றும் வார்த்தை பிழைகள்
நேர்காணலில் சூரிய ஆற்றல் (Solar System) குறித்துப் பேசியபோது ஏற்பட்ட வார்த்தை பிழையை ஒப்புக்கொண்ட அவர், தான் கல்வியில் சராசரி மாணவன் தான் என்றும், அந்த இடத்தில் சரியான தொழில்நுட்ப வார்த்தையை பயன்படுத்த முடியாமல் போனது தனது தவறு என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், 2015-ம் ஆண்டு கேரளாவின் கொச்சி சர்வதேச விமான நிலையம் முழுமையாக சூரிய சக்தியால் இயங்குவதைக்கண்டது தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டார். இதேபோன்ற திட்டங்கள் தமிழ்நாட்டிலும் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தனது விருப்பத்தைப் பதிவு செய்தார்.
தனிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குப் பதில்
தன்னை திமிரானவர் என்று சிலர் விமர்சிப்பது குறித்துப் பேசிய மகேந்திரன், ஒரு இயக்குநரிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் நடக்கவே இல்லை என்றும், சம்பந்தப்பட்ட நபரைத் தொடர்பு கொண்டபோது அவர் அதை விளையாட்டாகக் கூறியதாகத் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார்.
மேலும், மக்கள் கஷ்டத்தைப் பார்த்து சிரிக்கிறார் என்ற குற்றச்சாட்டை முற்றயமாக மறுத்த அவர், “இன்று நான் உண்ணும் உணவிற்கு இந்த மக்களே காரணம். அவர்களை நான் எப்போதும் மதிக்கிறேன். எனது நடிப்பு அல்லது திரைப்படங்கள் திருப்திகரமாக இல்லை என்றால் அதைச் சொல்லுங்கள், நான் சரிசெய்து கொள்கிறேன். ஆனால், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டாம்” என்று உருக்கமாகத் தெரிவித்தார்.
இறுதியாக, தனது பேச்சால் யாராவது மனவருத்தம் அடைந்திருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாகக் கூறி, இந்த இக்கட்டான சூழலில் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்தார்.

