இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் ‘நாட்டாமை’ திரைப்படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் மகேந்திரன். தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பான பிரச்சனைகள் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் சூழலில், அவர் அளித்த ஒரு நேர்காணல் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில், தமிழகத்தில் நிலவும் மின்வெட்டு பிரச்சனையை மக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும், அடுத்த ஆறு மாத காலத்திற்கு அரசுவிடம் எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது என்றும் தெரிவித்திருந்தார். மேலும், தனது வீட்டிலிருந்தே மின்சாரத்தை எடுத்துக் கொள்ளலாம் என்ற தொனியில் அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது. இதனால் பொதுமக்களிடையே அவரது கருத்துக்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தவறான புரிதலுக்கான விளக்கம்
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையான நிலையில், நடிகர் மகேந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளக்க வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மின்வெட்டு குறித்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “கேரள மாநிலம் கொச்சிக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த விமான நிலையம் சூரிய மின்சக்தி ஆற்றலில் இயங்குவதைக் கண்டேன். அதேபோல் மாற்று மின் ஆற்றல் முறைகளை நாம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பேசியிருந்தேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
மன்னிப்பு கோரிக்கை
மின்வெட்டு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் மக்களை விமர்சிக்கும் நோக்கம் தனக்கு இல்லை என்றும், தனது வார்த்தைகளால் யாருடைய மனமும் புண்பட்டிருந்தால் அதற்காக வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விளக்கத்திற்குப் பிறகு சமூக வலைதளங்களில் விவாதங்கள் தொடர்கின்றன.

Leave a Reply