பிரான்ஸ் நாட்டின் எவியான்-லெஸ்-பெய்ன்ஸ் நகரில் உலகளாவிய சவால்கள் மற்றும் உக்ரைன் விவகாரம் குறித்து விவாதிக்கும் நோக்கில் ஜி7 உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த முக்கிய நிகழ்வில் அமெரிக்க அதிபர் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக உலகத் தலைவர்கள் குழுப் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கும் இடையே ஒரு கலகலப்பான உரையாடல் நடைபெற்றது. புகைப்படப்பதிவுக்கு முன்னதாக இரு தலைவர்களும் கைகுலுக்கி வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
இந்த சந்திப்பின் போது, சமூக ஊடகங்களில் தங்களுக்குக் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டதுடன், அதற்குப் பதிலளித்த ஜார்ஜியா மெலோனி, தாங்கள் இருவருமே இன்ஸ்டாகிராம் தளத்தில் மிகவும் பிரபலமான ஜோடியாகக் கருதப்படுவதாகச் சிரித்துக் கொண்டே தெரிவித்தார்.
கடந்த மே மாதம் பிரதமர் மோடி ரோம் நகருக்குச் சென்றிருந்தபோது, மெலோனிக்கு இந்தியாவின் புகழ்பெற்ற ‘பார்லே மெலோடி’ மிட்டாய்களைப் பரிசாக வழங்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து மெலோனி தனது சமூக ஊடகப் பக்கத்தில், பிரதமர் மோடி வழங்கிய மிட்டாய்கள் மிகவும் சுவையாக இருப்பதாக வீடியோ ஒன்றைப்பதிவிட்டிருந்தார். அப்போது அவர் பயன்படுத்திய குறிச்சொற்கள் இணையத்தில் பெரும் கவனத்தைப் பெற்றிருந்தன.
இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையிலான இந்த நட்பு ரீதியான உறவு, வெறும் சமூக ஊடகக் கொண்டாட்டமாக மட்டும் இல்லாமல், இரு நாடுகளின் வெளியுறவுக் கொள்கையிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. குறிப்பாக, இந்தியா – மத்திய கிழக்கு – ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை உருவாக்குவதில் இத்தாலி நாட்டின் பங்களிப்பு தற்போது மிகமுக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது.
தற்போதைய புள்ளிவிவரங்களின்படி, இந்தியா மற்றும் இத்தாலி நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் 16.77 பில்லியன் டாலர்களைக் கடந்து உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
