தமிழ் திரையுலகில் கிராமிய வாழ்வியலை மையப்படுத்திப் புதிய அலையை உருவாக்கிய இயக்குநர் பாரதிராஜா, உடல்நலக்குறைவு காரணமாக 84 வயதில் காலமானார். சினிமா இயக்கம் மற்றும் கதையம்சத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்த அவரது மறைவு, திரைத்துறை மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திரைக்கதையில் ஒரு புதிய பாதை
’16 வயதினிலே’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பாரதிராஜா, அதுவரை ஸ்டுடியோக்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்த படப்பிடிப்பை கிராமப்புறங்களுக்குக் கொண்டு சென்ற முன்னோடி ஆவார். ‘சிவப்பு ரோஜாக்கள்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘முதல் மரியாதை’, ‘வேதம் புதிது’ போன்ற படைப்புகள் மூலம் இந்தியத் திரைப்படத் துறையின் கவனத்தை ஈர்த்த அவர், மண்வாசனையோடு கூடிய கதைகளை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.
உடல்நலக்குறைவும் மருத்துவ சிகிச்சையும்
சில மாதங்களுக்கு முன்பு மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய பாரதிராஜாவிற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சுவாசப் பாதிப்பால் அவதிப்பட்ட அவர், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பிப்ரவரி மாதம் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர், சென்னை நீலாங்கரை இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இருப்பினும், வயோதிகம் மற்றும் தொடர் உடல்நலப் பாதிப்புகள் காரணமாக நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார்.
அஞ்சலி மற்றும் இறுதிச் சடங்குகள்
பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டது. பின்னர், அவரது உடல் தேனி மாவட்டம் வத்தலக்குண்டு காட்ரோடு அருகேயுள்ள அவரது பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று பிற்பகல் 3 மணியளவில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் இரங்கல் செய்தி
இயக்குநர் பாரதிராஜாவின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “பாரதிராஜா அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. திரைப்பட உலகின் மகத்தான ஆளுமைகளில் ஒருவராக விளங்கிய அவர், தனது படைப்புகள் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக, கிராமிய வாழ்க்கையை அவர் திரையில் சித்தரித்த விதம் மிகவும் சிறப்பானது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் துயரமான சூழலில் அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த ரசிகர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Leave a Reply