பசிபிக் பெருங்கடலில் எல் நினோ தாக்கம்: பருவமழை மற்றும் வேளாண்மை பாதிப்பு குறித்து ஐநா எச்சரிக்கை

எல் நினோ

பசிபிக் பெருங்கடலில் வழக்கத்திற்கு மாறான வெப்பச் சுழற்சியான ‘எல் நினோ’ (El Nino) நிகழ்வு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதாக ஐக்கிய நாடுகளின் உலக வானிலை அமைப்பு அறிவித்துள்ளது. இந்த காலநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள மழைப்பொழிவு மற்றும் காற்று வீசும் திசைகளில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் என்று வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

காலநிலை மாற்றத்தின் பின்னணி

பூமியின் மொத்த பரப்பளவில் சுமார் 30 சதவீதப் பகுதியை ஆக்கிரமித்துள்ள பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர், இயல்பை விட அதிக வெப்பமடைவதை எல் நினோ என்று அழைக்கிறார்கள். இந்த நிகழ்வு பொதுவாக இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றி, ஒன்பது முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நீடிக்கும் தன்மை கொண்டது.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த வெப்பச் சுழற்சி, வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இன்னும் தீவிரமடைந்து, மேற்பரப்பு வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக உயரக்கூடும். இதனால் இது ஒரு ‘வலுவான எல் நினோ’ நிகழ்வாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள்

இந்தக் காலநிலை மாற்றத்தால் இந்தியாவிற்குப் பெரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தென்மேற்கு பருவமழை தாமதமடையக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. பருவமழை காலத்தில ஏற்படும் இந்தத் தாமதத்தால், விவசாயிகளின் நெல் விதைப்பு மற்றும் அறுவடைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என்று வேளாண்மை நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட எல் நினோ நிகழ்வின் போது, இந்தியாவின் ஆகஸ்ட் மாதம் கடந்த 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக வறண்ட மாதமாகப் பதிவானது குறிப்பிடத்தக்கது. தற்போது ஏற்பட்டுள்ள இந்தச் சுழற்சியும் அதே போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உலகளாவிய தாக்கங்கள்

இந்த நிகழ்வினால் ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் கடும் வறட்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், பசிபிக் பெருங்கடலின் சில பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்காவின் கினியா வளைகுடா பகுதிகளில் கடுமையான மழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.

ஐரோப்பிய கண்டத்தைப் பொறுத்தவரை, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் மாறுபட்ட காலநிலை நிலவும். தெற்கு ஐரோப்பாவில் அதிக மழையும், வடக்கு ஐரோப்பாவில் வறட்சியான சூழலும் நிலவும் என்று வானிலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

எல் நினோவின் தீவிரம் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளதால், வறட்சி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய ஏழ்மையான நாடுகளுக்கு உதவும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை தனது மனிதநேய அமைப்புகள் மற்றும் வேளாண்மைத் துறைகளை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

கடந்த 2024 ஆம் ஆண்டு உலக வரலாற்றிலேயே வெப்பமான ஆண்டாகப் பதிவானது. அப்போது ஏப்ரல் மாத இறுதியில் பசிபிக் பெருங்கடல் குளிர்ந்ததையடுத்து எல் நினோ சுழற்சி முடிவுக்கு வந்தது. தற்போது தொடங்கியுள்ள இந்தச் சுழற்சி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

#weatherupdate #agriculture #globalwarming #monsoon2026 #எல் நினோ #இயற்கை #வறட்சி #பெருமழை #வெப்ப அலை #பருவமழை

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *