தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் கடந்த மாதம் 20-ஆம் தேதி திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகச்சில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரையில், தமிழக முதல்வரை விமர்சனம் செய்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் சட்டமன்றத்தில் அவரது உரையாடல் குறித்து அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதனைத் தொடர்ந்து, தமிழக வெற்ற கழக நிர்வாகிகள் ஆத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 352 மற்றும் 353/2 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன் ஜாமின் மனு தள்ளுபடி மற்றும் கைது
இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இருப்பினும், நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை காவல்துறை அவரை கைது செய்தது. கைது நடவடிக்கைக்குப் பிறகு அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, கடந்த ஐந்து மணி நேரமாக அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நிறைவடைந்த பிறகு, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
காவல்துறை மீது குற்றச்சாட்டு
நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், காவல்துறை தனது அரசியல் செயல்பாடுகளில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டினார். தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யுமாறு காவல்துறை அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதாகவும், மேலும் தமிழக வெற்ற கழகத்தில் சேருமாறு தன்னை நிர்பந்தப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நான் எக்காரணத்தைக் கொண்டும் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். திமுகவில் உறுதியாக இருப்பேன். காவல்துறை இத்தகைய அராஜகமான செயல்களில் ஈடுபடுவது கண்டனத்திற்குரியது” என்று தனது எதிர்ப்பைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Reply