தூத்துக்குடியில் அரசு ஊட்டச்சத்து பெட்டகத்தில் பொருட்கள் மாயம்: சுகாதார நிலைய ஊழியர்கள் மீது புகார்

ஊட்டச்சத்து பெட்டகம்

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு வழங்கப்பட்ட ஊட்டச்சத்து பெட்டகத்தில் சில முக்கியப் பொருட்கள் விடுபட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேரகுளம் பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு, அரசின் தாய் சேய் நல திட்டத்தின் கீழ் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. சிவகாமி அந்த பெட்டகத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்று சரிபார்த்தபோது, அதில் இருக்க வேண்டிய நெய் பாட்டில் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், பேரீட்சை பழங்கள் இருக்க வேண்டிய டப்பா முற்றிலும் காலியாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பதிலளிக்க மறுத்த சுகாதார நிலைய ஊழியர்கள்

இந்த விடுபட்ட பொருட்கள் குறித்து விளக்கம் கேட்பதற்காக சிவகாமியின் குடும்பத்தினர் கருங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்றனர். அங்கு பணியிலிருந்த மருத்துவ உதவியாளர்களிடம் இது குறித்துக் கேட்டபோது, அவர்கள் முறையான பதில் அளிக்காமல் சிவகாமியின் குடும்பத்தினரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

ஊழியர்களின் இந்த அணுகுமுறையினால் ஆத்திரமடைந்த குடும்பத்தினர், பெட்டகத்தில் பொருட்கள் காணாமல் போன விவகாரத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிட்டனர்.

மருத்துவ அலுவலரின் விளக்கம்

இது குறித்து ஸ்ரீவைகுண்டம் மருத்துவ அலுவலர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசு கொள்முதல் நிலையத்திலிருந்து பெட்டகங்கள் வரும்போதே, சில பெட்டகங்களில் சில பொருட்கள் விடுபட்டிருக்க வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சிவகாமிக்கு விடுபட்ட பொருட்களை உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்குவதற்கு முன்னதாக, அதில் அனைத்துப் பொருட்களும் முழுமையாக இருப்பதை ஊழியர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

#tuticorin #healthDept #tamilNaduGovernment #nutritionKit #கர்ப்பிணி பெண்கள் #ஊட்டச்சத்து பெட்டகம் #தூத்துக்குடி #pregnantWoman #kid #கர்ப்பிணி பெண்

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *