தமிழ்நாட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் வழங்கப்படும் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கல்விக் கட்டண விவரங்களை தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் வரும் காலங்களில் மாணவர்களுக்கு வசதியாக இருக்கும் வகையில் மூன்று கல்வியாண்டுகளுக்கான கட்டணங்கள் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மூன்று ஆண்டுகளுக்கான கட்டண நிர்ணயம்
மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் அறிவிப்புப்படி, 2026-2027, 2027-2028 மற்றும் 2028-2029 ஆகிய மூன்று கல்வியாண்டுகளுக்குத் துணை மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணங்கள் நடைமுறைக்கு வரும். அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கும், நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களுக்கும் தனித்தனியாகக் கட்டண விவரங்கள் வகுக்கப்பட்டுள்ளன.
டிப்ளமோ படிப்புகளுக்கான கட்டண விவரங்கள்
சுகாதார ஆய்வாளர் மற்றும் சானிட்டரி இன்ஸ்பெக்டர் ஆகிய பட்டயப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்கள் ஆண்டுக்கு 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருபவர்கள் 70 ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும்.
செவிலியர் பொதுப் பாடப் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டில் 35 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 75 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், துணை செவிலியர் மகப்பேறு பட்டயப் படிப்புக்கு அரசு ஒதுக்கீட்டில் 30 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 60 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக இருக்கும்.
மருந்தகப் பட்டயப் படிப்புக்கு (டிப்ளமோ பார்மசி) அரசு ஒதுக்கீட்டில் 25 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பட்டப்படிப்புகளுக்கான கட்டணங்கள்
பிஎஸ்சி நர்சிங் மற்றும் போஸ்ட் பிஎஸ்சி நர்சிங் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 60 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1.20 லட்சம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிபார்ம், பிபிடி, பிஓடி மற்றும் பிபார்ம் லேட்டரல் என்ட்ரி ஆகிய படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1 லட்சம் ரூபாயும் வசூலிக்கப்படும். மேலும், இளநிலை அலைடு ஹெல்த் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 50 ஆயிரம் ரூபாயும், நிர்வாக ஒதுக்கீட்டில் 1 லட்சம் ரூபாயும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply