சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரிடம் பணம் கொடுத்து பேரம் பேசிய வழக்கில் மேலும் ஆறு பேரை சென்னை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தலைமையில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தற்போதைய ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சில உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தொடர்ச்சியாக தவெக கட்சியில் இணைந்து வருகின்றனர்.
சதித்திட்டமும் பணப் பரிமாற்றமும்
இந்த அரசியல் சூழலில், சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர திட்டமிட்ட சிலர், ஆளும் கட்சியின் உறுப்பினராக இருக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளைராஜாவிடம் அணுகியுள்ளனர். சபாநாயகருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும், அதற்காக ரூ.35 கோடி வரை வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் ஆசை வார்த்தைகளைக் கூறியுள்ளனர்.
தன்னிடத்தில் நடந்த இந்த சட்டவிரோத முயற்சியை அறிந்த இளைராஜா, இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் அமல்ராஜ் அவர்களை நேரில் சந்தித்து முறையான புகார் ஒன்றை அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஏற்கனவே ஐந்து பேரை கைது செய்திருந்தனர்.
வழக்குப்பதிவும் கைது நடவடிக்கையும்
இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, திருநாவுக்கரசு, நரேஷ், கிருஷ்ணன், அசோக்குமார் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. குறிப்பாக, செந்தில் பாலாஜி சகோதரர் அசோக்குமார் மீது கொலை மிரட்டல் மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் நான்கு வழக்குகளாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடர் விசாரணையில், இந்த சதித்திட்டத்துடன் தொடர்புடைய மேலும் ஆறு நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த செல்வன், ஸ்ரீநிவாசன், ராஜேஷ் ஆகிய மூவரும், கரூரைச் சேர்ந்த ரமேஷ், கார்த்திக் ஆகிய இருவர் மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த அசோக்குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது போலீசாரின் தீவிர விசாரணையில் இருக்கும் நிலையில், இந்த பணப் பரிமாற்றத்திற்குப் பின்னால் இருக்கும் மற்ற நபர்கள் மற்றும் அரசியல் பின்னணிகள் குறித்துத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply