தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைமையில், மாநில ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் புதிய கூட்டணி உருவாக்கத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள பிஷர்மேன்ஸ் கோவ் ரிசார்ட்டில், முதல்வர் விஜய் மற்றும் ஆதரவு அளித்துள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் இந்த முக்கியக் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. ஆட்சி பொறுப்பை ஏற்ற பிறகு, கூட்டணி கட்சிகளுடன் முதல்வர் விஜய் முன்னின்று நடத்தும் முதல் அதிகாரப்பூர்வக் கூட்டம் இதுvஎன்பது குறிப்பிடத்தக்கது.
மதச்சார்பற்ற கூட்டணியை கட்டமைக்கும் திட்டம்
அரசு அமைப்பதற்கும் அதன் செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்த தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கு முதல்வர் விஜய் தனது நன்றிகளை நேரில் தெரிவிக்க உள்ளார். மேலும், தமிழகத்தில் ஒரு வலுவான மற்றும் முறையான மதச்சார்பற்ற கூட்டணியை அதிகாரப்பூர்வமாக கட்டமைப்பது குறித்து இந்த ஆலோசனையில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.
இந்தக் கூட்டணிக்கான பெயரைத் தீர்மானிப்பதும் இன்றைய கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காக ‘மதசார்பற்ற சமூகநீதி கூட்டணி’ மற்றும் ‘தமிழ்நாடு முற்போக்கு சமூகநீதி கூட்டணி’ ஆகிய பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பங்கேற்பு மற்றும் கட்சிகளின் நிலைப்பாடு
இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ், வி.சி.க, ம.தி.மு.க மற்றும் ஐ.யூ.எம்.எல் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அவர்களது எம்.பி, எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கின்றனர். இருப்பினும், தவெக அரசுக்கு வெளியில் இருந்து மட்டுமே ஆதரவு அளிப்பதாகத் தெரிவித்துள்ள இடதுசாரி கட்சிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
கூட்டணியை ஒருங்கிணைக்கத் தனி ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம் செய்யப்படுவதுடன், பொதுவான வழிகாட்டுதல் குழுவும் உருவாக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது ஐந்து ஆண்டுகால ஆட்சியை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுத்துச் செல்ல உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில உரிமைகள் மற்றும் தேர்தல் வியூகம்
வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தல்களைக் கூட்டணி கட்சிகள் இணைந்து எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. அத்துடன் காவிரி நீர் விவகாரம், மேகதாது அணைப் பிரச்சினை மற்றும் இருமொழிக் கொள்கை போன்ற மாநில உரிமைகள் சார்ந்த விவகாரங்களில் ஒருங்கிணைந்த செயல்பாட்டை உருவாக்குவது குறித்தும் விவாதிக்கப்படும்.
கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் மற்றும் விருப்பங்களை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து முதல்வர் விஜய் இன்று விரிவான கலந்துரையாடலை மேற்கொள்ள உள்ளார்.

Leave a Reply