ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது ‘காளிதாஸ் 2’ திரைப்படம்

காளிதாஸ் 2

நடிகர் பரத் நடிப்பில் உருவான ‘காளிதாஸ் 2’ திரைப்படம், சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆசியாவின் மிக முக்கியமான திரைப்பட விழாவாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF 2026) திரையிடப்பட்ட ஏழு இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக இத்திரைப்படம் தேர்வாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், இயக்குநர் ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் உருவானது. 2018-ல் வெளியான ‘காளிதாஸ்’ படத்தின் இரண்டாம் பாகமாக இது உருவாக்கப்பட்டது. இதில் பரத் உடன் அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தென்னிந்தியாவின் பிரதிநிதித்துவமாக தேர்வு

சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21 வரை நடைபெற்ற இந்த திரைப்பட விழாவில், உலகெங்கிலும் உள்ள முன்னணி இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். இந்தியாவிலிருந்து மொத்தம் ஏழு திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்ட நிலையில், தென்னிந்தியாவிலிருந்து ஒரே ஒரு திரைப்படமாக ‘காளிதாஸ் 2’ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

விழாவின் முதன்மையான நிகழ்வுகள் முடிந்த பிறகு, சிறப்புத் திரையிடல்கள் ஜூன் 28 வரை ஷாங்காய் நகரின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றன. இதன் மூலம் இத்திரைப்படம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

#cinema #internationalFilmFestival #tamilMovie #bharath

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *