கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கண்டமங்கலம் பகுதியில், வண்டல் மண் எடுக்கும் விவசாயியிடம் கட்சி நிதி என்ற பெயரில் பணம் கேட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகி, கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தின் பின்னணி
கண்டமங்கலத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், காட்டுமன்னார் கோவில் வருவாய்த் துறையிடம் முறையான அனுமதி பெற்று, நாரைகால் ஏரியில் வண்டல் மண் எடுத்து தனது நிலத்தில் பயன்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். இதற்காக ஒரு பொக்லைன் இயந்திரம் மற்றும் பத்து டிராக்டர்கள் மூலம் மண் எடுக்கும் பணி நடந்து வந்தது.
இந்தச் சூழலில், கடலூர் தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக்கழக இணை செயலாளர் புலவேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்திருந்தார். அப்போது விவசாயி ராஜேஷிடம் பேசிய அவர், தங்களுக்குக் கட்சி நிதியாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று கோரியதாகத் தெரிகிறது. முறையான அனுமதி பெற்று மண் எடுக்கும் நிலையில், பணம் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என்று ராஜேஷ் மறுத்ததையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், பணம் வழங்காவிட்டால் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு பணியை நிறுத்தச் செய்வதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.
பொதுமக்களின் எதிர்ப்பு
கட்சி நிர்வாகி விவசாயியிடம் பணம் கேட்ட செய்தி அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், புலவேந்திரன் வந்திருந்த காரை முற்றுகையிட்டனர். நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இந்தச் சம்பவம் அங்கிருந்தவர்களால் காணொளியாகப் பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கட்சி நடவடிக்கை
விவகாரம் பெரிதான நிலையில், கடலூர் தெற்கு மாவட்ட செயலாளர் சீனுவாசன் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக்கழக கடலூர் தெற்கு மாவட்ட இணை செயலாக் புலவேந்திரன், கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத் தலைமை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒப்புதலோடு கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நீக்கப்பட்ட நிர்வாகியுடன் மற்ற நிர்வாகிகள் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அந்த அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply