சென்னையை அடுத்த பல்லாவரம் கணபதி நகர் பகுதியில் வசித்து வந்த சாமுவேல் (41) என்பவர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சென்னை மாநகராட்சி மண்டலம் 12-ல் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வந்தவர் இவர்.
பணி நிரந்தரம் செய்யப்படாத மன உளைச்சல்
சாமுவேல் கடந்த பல ஆண்டுகளாக மாநகராட்சியில் பணியாற்றியும், அவரது பணியை அரசு நிரந்தரம் செய்யாதது அவருக்கு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. மாதம் சுமார் 20 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வந்த அவர், தனது குடும்பச் செலவுகள் மற்றும் குழந்தைகளின் கல்வித் தேவைகளுக்காகப் பலரிடம் கடன் வாங்கியிருந்தார். மேலும், வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு நிதி நெருக்கடிகளால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகத் தெரிகிறது.
தனது பணி நிலை குறித்து குடும்பத்தினரிடமும், சக பணியாளர்களிடமும் அடிக்கடி வெளிப்படையாகவே தனது வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டதாக நெருங்கியவர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழலில், மன உளைச்சலால் அவர் இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.
உருக்கமான வீடியோ பதிவு
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, சாமுவேல் தனது மனவலியை விவரித்து ஒரு வீடியோவைப்பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தும் பணி நிரந்தரம் கிடைக்காததாலும், கடன் கொடுத்தவர்களின் தொடர் நெருக்கடியாலும் தாமு மனரீதியாக உடைந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
மேலும், தனது மறைவுக்குப் பிறகு, தனது மனைவி மற்றும் குழந்தைகளை யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், கடன் கொடுத்தவர்கள் அவரது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்றும் கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
போலீசார் விசாரணை
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சாமுவேலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கான மற்ற காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், வீடியோ பதிவின் உண்மைத்தன்மை குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply