சிப் விலை உயர்வு: இந்தியாவில் மேக்புக் மற்றும் ஐபேட் விலையை உயர்த்திய ஆப்பிள்

ஆப்பிள் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் மெமரி சிப்களின் விலை கணிசமாக உயர்ந்திருப்பதை அடுத்து, ஆப்பிள் நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் தனது மேக்புக் மற்றும் ஐபேட் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளது. அறிமுக விலையை விட 20 சதவீதம் முதல் அதிகபட்சமாக 42 சதவீதம் வரை இந்த விலை உயர்வு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர் விலை மாற்றம்

ஆப்பிள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியலில், M5 சீரிஸ் சிப்செட் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்களின் விலை சுமார் 20 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, M5 ப்ரோ சிப் பொருத்தப்பட்ட 14-இன்ச் மேக்புக் ப்ரோவின் விலை ரூ. 2,49,900-லிருந்து ரூ. 2,99,900-ஆக உயர்ந்துள்ளது.

இதேபோல், ஐபேட் ஏர் மாடல்களின் விலையிலும் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 13-இன்ச் ஐபேட் ஏர் அடிப்படை மாடலின் விலை ரூ. 84,900-லிருந்து 41.22 சதவீதம் உயர்ந்து ரூ. 1,19,900-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

உதிரிபாகங்களின் விலை உயர்வுக்கான காரணம்

இது குறித்து கவுண்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் ஆராய்ச்சி பிரிவு துணை தலைவர் நீல் ஷா விளக்கமளித்துள்ளார். மெமரி சிப்கள் முதல் பிராசஸர்கள் வரையிலான செமி கண்டக்டர் உதிரிபாகங்களின் விலை உயர்வு, கணினி மற்றும் டேப்லெட் சந்தையின் செலவு கட்டமைப்பில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாகவே மேக்புக் நியோ, மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மற்றும் ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ வைஃபை ஆகிய மாடல்களின் விலையை ஆப்பிள் நிறுவனம் உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு மையங்களின் தாக்கம்

நுகர்வோர் மின்னணுத் துறை தற்போது முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தரவு மையங்களின் அதிவேக விரிவாக்கம் காரணமாக, மெமரி மற்றும் சேமிப்பு வசதிகளுக்கான தேவை வழக்கத்திற்கு மாறாக அதிகரித்துள்ளது.

ஒரு குறிப்பிட்ட உதிரிபாகத்தின் விலை இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமாக உயர்ந்ததை நிறுவனம் இதற்கு முன் கண்டதில்லை என்று ஆப்பிள் குறிப்பிட்டுள்ளது. வாடிக்கையாளர்களை இந்த விலை உயர்வில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்த போதிலும், தற்போது விலை மாற்றத்தைத் தவிர வேறு வழியில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

தீர்வுகளைக் கண்டறிய நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும், வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை உயர்வு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதை நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#appleIndia #priceHike #macbook #ipad #semiconductor #apple #ஆப்பிள் #மேக்புக் #விலை உயர்வு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *