மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் தொடரும் போராட்டம்

மத்திய கல்வி அமைச்சர்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக் கோரி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்திரி பகுதியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் இன்று ஏழாம் நாளைக் கடந்துள்ளது. நீட் தேர்வு வினாத்தாள்கள் கசிந்த விவகாரம் மற்றும் சிபிஎஸ்சி அமைப்பில் நிலவும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

பிறந்தநாள் தினத்தில் கிண்டல் போராட்டங்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு இன்று பிறந்தநாள் என்பதால், போராட்டக் களத்தில் அதனை மையப்படுத்திய செயல்பாடுகள் காணப்பட்டன. சில இளைஞர்கள் பிறந்தநாள் பாடல்களைப் பாடிய நிலையில், கரப்பான்பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே, “பிரதான், பிறந்தநாள் வாழ்த்துகள்; தயவுசெய்து ராஜினாமா செய்யுங்கள்” என்று எழுதப்பட்ட பலகையை ஏந்தி நின்றார். இது தொடர்பான காணொளி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இது குறித்துப் பேசிய அபிஜித் தீப்கே, “அமைச்சர் அவர்களுக்குப் பிறந்தநாள் பரிசாக ராஜினாமா கடிதத்தைத் தயாரித்து அனுப்பத் தயாராக இருக்கிறோம். அவர் செய்ய வேண்டியதெல்லாம் அதில் கையெழுத்திடுவது மட்டுமே” என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

மாணவர் மரணங்கள் குறித்துக் குற்றச்சாட்டு

தொடர்ந்து பேசிய தீப்கே, நீட் தேர்வு முறைகேடுகளால் நாடு முழுவதும் 17-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகக் குற்றம் சாட்டினார். இந்தத் துயரமான மரணங்கள் அனைத்திற்கும் கல்வி அமைச்சரே முழுப் பொறுப்பு என்று அவர் தெரிவித்தார். மேலும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறிக்கொள்ளும் பிரதமரால், நாட்டின் தேர்வு வினாத்தாள் கசிவுகளைத் தடுத்து நிறுத்த முடியாதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

நீதிக்காகப் போராடுபவர்களை அரசாங்கம் பயங்கரவாதிகள் என்று அழைப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், போராட்டத்தின் ஐந்தாம் நாளில் தங்கள் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளக் கணக்கு முடக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதப் போராட்டம்

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக லடாக் பகுதியைச் சேர்ந்த விஞ்ஞானியும் செயல்பாட்டாளருமான சோனம் வாங்சுக் இணைந்துள்ளார். ஜூன் 27-ஆம் தேதிக்குள் மத்திய அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஜூன் 28-ஆம் தேதி முதல் ஜந்தர் மந்திரி பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குவதாக அவர் அறிவித்துள்ளார்.

#கல்வி அமைச்சன் #நீட் தேர்வு #டெல்லி போராட்டம் #மத்திய அரசு #கரப்பான்பூச்சி ஜனதா கட்சி #நீட் வினாத்தாள் கசிவு #தர்மேந்திர பிரதான் #cockroachJanataParty #dharmendraPradhan #neetQuestionPaperLeak

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *