தமிழக மின்சார வாரியத்தின் நிதிநிலை, செலவினங்கள் மற்றும் கடன் சுமைகள் குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மின்வாரிய தலைமையகத்தில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று வெளியிட்டார். கடந்த சில ஆண்டுகால மின்சார வாரியத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி நெருக்கடிகள் குறித்த தரவுகள் இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
மின்வாரியத்தின் கடன் சுமை மற்றும் நிதிப்பற்றாக்குறை
தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்ட மாநில நிதிநிலை வெள்ளை அறிக்கையில், மாநிலத்தின் ஒட்டுமொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதில் மின்சாரத் துறையின் நிலுவைக் கடன் மட்டும் ரூ.2,47,130 கோடியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுத்துறை நிறுவனங்களின் மொத்தக் கடனான ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியில், மின்சாரத் துறையின் கடன் மட்டும் 77.6 சதவீதமாகும்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், மின்சார வாரியத்தின் நிதிநிலை குறித்துத் தனியாக ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட விரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இன்றைய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 25 ஆண்டுகால செயல்பாடுகள்
2001-ஆம் ஆண்டு முதல் மின்சார வாரியம் கடந்து வந்த நிதிப் பாதை குறித்து இந்த அறிக்கையில் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2001 முதல் 2006 வரையிலான காலக்கட்டத்தில் ரூ.59 ஆயிரம் கோடி வருவாயும், ரூ.67 ஆயிரம் கோடி செலவும் ஏற்பட்டுள்ளதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட காலங்களில், அதே விகிதத்தில் செலவினங்களும் அதிகரித்துள்ளன. ஆனால், அதற்கேற்ப மின்சாரக் கட்டமைப்புகள் பலப்படுத்தப்படவில்லை என்றும், புதிய பணியாளர் நியமனங்கள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிதி மேலாண்மை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள்
2021 முதல் 2026 வரையிலான காலக்கட்டத்திற்கான நிதிநிலை கணிப்புகளை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட்டார். அதன்படி:
கடந்த 2021 முதல் 2026 வரையிலான கால அளவில் மின்வாரியத்தின் மொத்தச் செலவு ரூ.5.32 லட்சம் கோடியும், வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.34,447 கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
மின்சாரத் துறையை மீட்டெடுத்து வளர்ச்சியை நோக்கி கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு வாங்கப்படும் மின்சாரத்தை, நீண்ட கால ஒப்பந்தங்களாக மாற்றி விலையைக் குறைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் மாதம் ரூ.215 கோடி வரை சேமிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply