2017-ஆம் ஆண்டு ‘ஒரே நாடு, ஒரே வரி, ஒரே சந்தை’ என்ற தொலைநோக்குடன் அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முறையில், நிர்வாக நடைமுறைகளை மேலும் எளிதாக்க மத்திய அரசு புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
தற்போதைய விதிகளின்படி, ஒரு நிறுவனம் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் தனது வணிகத்தை மேற்கொண்டால், அந்தந்த மாநிலங்களில் தனித்தனியாக ஜிஎஸ்டி பதிவு பெற வேண்டியது கட்டாயமாகும். இது வணிக நிறுவனங்களுக்கு அதிகப்படியான நிர்வாகச் சுமைகளையும், கூடுதல் செலவுகளையும் ஏற்படுத்துவதாகக் கருதப்படுகிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்கும் நோக்கில், நிரந்தர கணக்கு எண் (PAN) அடிப்படையிலான ஒரே தேசிய ஜிஎஸ்டி பதிவை அறிமுகப்படுத்த கவுபா குழு பரிந்துரைத்துள்ளது.
நிர்வாகச் சுமைகளைக் குறைக்கும் புதிய திட்டம்
தற்போதுள்ள நடைமுறையில், பல மாநிலங்களில் செயல்படும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக வரி அறிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டியுள்ளது. இது சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. புதிய பரிந்துரை அமல்படுத்தப்பட்டால், தேசிய அளவில் ஒரே பதிவு போதுமானதாக இருக்கும். இதன் மூலம் வரி தாக்கல் செய்யும் முறை எளிமையாவதோடு, நிறுவனங்களின் செயல்பாட்டுச் செலவுகளும் கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜிஎஸ்டி அறிமுகமானபோது, மதிப்புக்கூட்டு வரி, சேவை வரி, மத்திய உற்பத்தி வரி மற்றும் நுழைவு வரி எனப் பல மறைமுக வரிகள் ஒன்றிணைக்கப்பட்டன. மேலும், உள்ளீட்டு வரி வரவு (ITC) முறை மூலம் வரிக்கு மேல் வரி விதிக்கப்படும் நடைமுறை நீக்கப்பட்டது. தற்போது, அந்த வரி கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது.
கவுபா குழுவின் பரிந்துரையும் செயல்பாடும்
முன்னாள் அமைச்சரவை செயலர் ராஜீவ் கவுபா தலைமையில் அமைக்கப்பட்ட உயர்நிலை குழுவே இந்தப் பரிந்துரையை வழங்கியுள்ளது. தொழில் தொடங்குவதை எளிதாக்குதல், முதலீட்டுச் சூழலை மேம்படுத்துதல் மற்றும் நிர்வாகத் தடைகளை நீக்குதல் ஆகிய நோக்கங்களுக்காக இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் தற்போது மத்திய அரசின் தீவிர பரிசீலனையில் உள்ளன.
நடப்பு நிதியாண்டிலேயே இந்தச் சீர்திருத்தங்களை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை நடைமுறைக்கு வந்தால், நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி நடைமுறை உருவாக்கப்பட்டு, வணிகச் செயல்பாடுகள் மேலும் வேகமெறும்.

Leave a Reply