தமிழக முதல்வர் விஜய் அவர்கள் இன்று காலை தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். நாளை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்த அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்டக் கூட்டத்தில் அனைத்து மாநில முதலமைச்சர்களும் கலந்து கொண்டு மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்க உள்ளனர். இதில் பங்கேற்கும் முதல்வர் விஜய், தமிழகத்திற்குத் தேவையான கூடுதல் நிதி ஒதுக்கீடு மற்றும் முக்கிய திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்பை வலியுறுத்திப் பேச உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட முக்கிய மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிதி ஆயோக் கூட்டத்தின் நிறைவுக்குப் பிறகு, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து உரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் நிதி நிலுவைத் தொகையைத் திரும்பப் பெறுவது குறித்தும், மாநில உரிமைகளை உறுதிப்படுத்துவது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்க வாய்ப்புள்ளது.
கூட்டணித் தலைவர்களுடன் மரியாதை சந்திப்பு
அரசுமுறைப் பணிகளுடன் இணைந்த இந்தக் பயணத்தின் ஒரு பகுதியாக, இன்று டெல்லியில் உள்ள பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களை முதல்வர் விஜய் சந்தித்தார். இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.
தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜாவையும் முதல்வர் சந்தித்தார். இந்தச் சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட கூட்டணி அமைப்புகள் வலுவான ஆதரவை வழங்கி வருகின்றன.
கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல் முறையாக டெல்லி சென்றிருந்த விஜய், அப்போது பிரதமர் மோடியைச் சந்தித்துத் தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கியிருந்தார். மேலும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்தித்துத் தமிழகத்திற்கான நிலுவைத் தொகையை வழங்கக் கோரியிருந்தார். அந்தத் தொடர்ச்சியாகவே தற்போது இரண்டாவது முறையாக இந்த டெல்லி பயணம் அமைந்துள்ளது.

Leave a Reply