மத்திய வங்கக்கடல் முதல் கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோரப் பகுதிகள் வழியாக வளிமண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் தாக்கத்தால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வட்டார வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். நகரின் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்றைய அதிகபட்ச வெப்பநிலை 38 முதல் 39 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 முதல் 30 டிகிரி செல்சியஸாகவும் பதிவாக வாய்ப்புள்ளது.
கனமழை எச்சரிக்கையிடப்பட்ட மாவட்டங்கள்
தமிழகத்தின் மேற்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, திருநெல்வேலி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
நாளை நிலவும் வானிலை சூழல்
நாளை (ஜூன் 12) தமிழகத்தின் பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தேனி, கடலூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெப்பநிலை மாற்றங்கள்
ஜூன் 11 முதல் ஜூன் 14 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும். எனினும், இந்த காலக்கட்டத்தில் வெப்பத்தின் அளவு இயல்பான நிலையிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply