ஆந்திர மாநிலத் துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக அரசியல் சூழல் மற்றும் அங்கு சமீபத்தில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள் குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். தமிழகத்தில் சில அரசியல் நிகழ்வுகள் மிக எளிதாக வெற்றி பெற்றுவிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் வெற்றி குறித்த ஒப்பீடு
ஆந்திராவில் நடைபெற்ற ஒரு பொது நிகழ்ச்சியில் உரையாற்றிய பவன் கல்யாண், தமிழக அரசியலில் சமீபகாலமாக நிகழ்ந்து வரும் மாற்றங்களைக் கவனித்து வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, தமிழகத்தில் சில தலைவர்கள் மிகக் குறுகிய காலத்தில் பெரும் ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வருவதைக் கண்டு வியப்பதாகவும், அது குறித்து ஒருவித பொறாமை இருப்பதாகவும் அவர் வெளிப்படையாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 15 ஆண்டுகளாக நான் அரசியலில் தீவிரமாகப் பயணித்து வருகிறேன். இருப்பினும், தமிழகத்தில் காணப்படுவது போன்ற ஒரு விரைவான வெற்றியை என்னால் ஈட்ட முடியவில்லை. அங்கு வெறும் கட் அவுட்கள் மற்றும் பேனர்கள் மூலமே மக்கள் ஆதரவைத் திரட்டி வெற்றி பெறுவதை பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டார்.
மக்களின் எதிர்பார்ப்பும் அரசியல் பயணமும்
வெற்றி என்பது வெறும் விளம்பரங்களால் மட்டும் கிடைப்பதில்லை என்றும், ஒரு அரசியல் கட்சியை வழிநடத்துவதற்கு லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொள்ளும் மனப்பக்குவம் தேவை என்றும் அவர் வலியுறுத்தினார். “ஏன் நான் இத்தனை ஆண்டுகளாகக் கடினமாக உழைக்க வேண்டும் என்பதற்கு மனிதாபிமான ரீதியிலான சிந்தனையும், ஆழமான அறிவும் காரணமாக இருக்கிறது” என்று அவர் விளக்கினார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சித் தொடக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சட்டமன்றத் தேர்தலில் அந்தப் கட்சி 108 இடங்களை வென்றது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் அங்கு ஆட்சி அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஆந்திராவின் மூத்த நடிகர் சிரஞ்சீவி தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்திருந்த நிலையில், தற்போது பவன் கல்யாணின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply