தமிழ்நாடு அரசு அறிவிப்பு: கூட்டுறவு வங்கிகளில் குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை பயிர்க்கடன் தள்ளுபடி

பயிர்க்கடன் தள்ளுபடி

தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகளின் மூலம் பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு 50,000 ரூபாய் வரையிலான கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார். விவசாயிகளின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (25.05.2026) முதலமைச்சர் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பான உயர்തല ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ம. வினோத், கூட்டுறவுத் துறை அமைச்சர் வி. காந்திராஜ், நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் மற்றும் அரசுத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

குறு விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி விவரங்கள்

இக்கூட்டத்தின் முடிவில், குறு விவசாயிகளின் நிதி நிலையை மேம்படுத்தும் வகையில் கடன் தொகையை அடிப்படையாகக் கொண்டு தள்ளுபடி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகையை முழுமையாக (100%) அரசு தள்ளுபடி செய்கிறது.

மேலும், 50,001 முதல் 60,000 ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களுக்கு 40,000 ரூபாயும், 60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 30,000 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும். இதேபோல் 70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களுக்கு 20,000 ரூபாயும், 80,001 முதல் 1,00,000 ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களுக்கு 10,000 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும். ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலாகக் கடன் பெற்றவர்களுக்கு 5,000 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறு மற்றும் பெரு விவசாயிகளுக்கான சலுகைகள்

சிறு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளின்படி, 50,000 ரூபாய் வரையிலான கடன் தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுகிறது. 50,001 முதல் 60,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 20,000 ரூபாயும், 60,001 முதல் 70,000 ரூபாய் வரை கடன் பெற்றவர்களுக்கு 15,000 ரூபாயும் தள்ளுபடி செய்யப்படும்.

70,001 முதல் 80,000 ரூபாய் வரை கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கு 10,000 ரூபாயும், 80,001 முதல் 1,00,000 ரூபாய் வரை கடன் பெற்றிருப்பவர்களுக்கு 5,000 ரூபாயும் தள்ளுபடி வழங்கப்படும். ஒரு லட்சத்திற்கு மேல் கடன் பெற்ற சிறு விவசாயிகளுக்கும் 5,000 ரூபாய் தள்ளுபடி அளிக்கப்படும்.

குறு மற்றும் சிறு விவசாயிகள் மட்டுமின்றி, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள இதர பெரு விவசாயிகளுக்கும் இந்தத் திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள அனைத்து பெரு விவசாயிகளுக்கும் தலா 5,000 ரூபாய் வீதம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

#agriculture #tamilNaduGovernment #loanWaiver #farmerWelfare #tamilNaduCropLoanWaiver #vijayCropLoanWaiver #tnFarmersLoanWaiver #cooperativeBankLoanWaiver #rs50000CropLoanWaiver #பயிர்க்கடன் தள்ளுப்படு

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *