தமிழக மின்சாரம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தமிழக அரசியல் சூழல் மற்றும் மின் விநியோகம் குறித்த முக்கியத் தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
தவெகவின் அரசியல் பலம்
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) தற்போதைய நிலை குறித்துப் பேசிய அமைச்சர், அந்த கட்சி மற்ற கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தங்களிலோ அல்லது குதிரை பேரத்திலோ ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். தேர்தல் இப்போது நடைபெற்றாலும், 200 தொகுதிகளுக்கு மேல் மக்கள் தவெகவிற்கு வாக்களிப்பார்கள் என்று அவர் குறிப்பிட்டார். கட்சியின் தலைவர் மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக இருப்பதாகவும், அதுவே கட்சியின் வலிமையாகக் கருதி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுகவில் நிலவும் குழப்பம்
அதிமுகவிலிருந்து பலர் தவெகவில் இணைவது குறித்துக் கேட்டபோது, அதிமுகவின் தலைமை மற்றும் கட்சியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையற்ற சூழலே இதற்கு காரணம் என்று அமைச்சர் கூறினார். கட்சியில் நிலவும் உள்முரண்பாடுகளைக் கண்டு அங்கிருந்த நபர்கள் தாங்களாகவே ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ளனர். அவர்கள் எடுத்த முடிவைத் தங்களால் தடுக்க முடியாது என்றும், இது அதிமுகவில் நிலவும் குழப்பங்களின் வெளிப்பாடே என்றும் அவர் தெரிவித்தார்.
மின்தடைத் தீர்வுக்கு சிறப்புக்குழுக்கள்
அரசியல் விவாதங்களைத் தொடர்ந்து, தமிழகத்தில் நிலவும் மின் விநியோகப் பிரச்சினைகள் குறித்துப் பேசிய அமைச்சர், மின்தடை ஏற்படாமல் தடுக்க அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். குறிப்பாக, மின் விநியோகத்தில் பாதிப்புகள் ஏற்படும் பகுதிகளில் அவற்றை உடனடியாகச் சரிசெய்ய ஏழு குழுக்களைக் கொண்ட நடமாடும் குழுக்கள் (Mobile Teams) அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் களப்பணிகள் விரைவுபடுத்தப்பட்டு மின்தடை சரிசெய்யப்பட்டு வருவதாக அவர் விளக்கினார்.
மேலும், திட்டமிட்டு மின் தடைகளை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்து வருவதாகவும், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்க வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

Leave a Reply