தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பசுமை எரிசக்தி திட்டங்களுக்கான ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமலும், அவசர கதியிலும் செயல்பாடுகள் நடந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாரியத்தின் இரண்டு உயர் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எரிசக்தி வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் தொடர் ஆய்வு கூட்டங்களை நடத்தி வந்தார். இந்த ஆய்வுகளின் போது, தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகத்தின் சமீபத்திய திட்ட ஒதுக்கீடுகளில் முறையான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதும், சில ஒப்புதல்கள் அவசர அவசரமாக வழங்கப்பட்டிருப்பதும் வெளிச்சத்திற்கு வந்தன.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகள்
நிர்வாக ரீதியான முறையற்ற தலையீடு மற்றும் இதர குற்றச்சாட்டுகள் தொடர்பாக முறையான விசாரணை நடத்துவதற்காக, பின்வரும் அதிகாரிகள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்:
வருவாய் பிரிவின் தலைமை நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரான வி. காசி மற்றும் மரபுசாரா எரிசக்தி பிரிவின் தலைமை பொறியாளரான பி. சந்திரசேகரன் ஆகியோர் இந்த நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளனர். இவர்களின் செயல்பாடுகள் குறித்து துறை ரீதியான விரிவான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.
ஓய்வு பெற்ற இயக்குநரின் பலன்கள் நிறுத்தம்
இந்த முறைகேடுகளில் தொடர்புடைய பொறுப்புகளில் இருந்த பசுமை எரிசக்தி கழகத்தின் ஓய்வு பெற்ற தொழில்நுட்ப இயக்குநர் எஸ். மங்களநாதன் என்பரின் ஓய்வூதியப் பலன்கள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்வாரிய விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்கள் மீதும் துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவுகளுக்குப் பிறகு மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply