உங்களுக்குப் பேராசை… முதலாளித்துவத்துக்கு இரையானீர்கள்: பார்வதி

இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பார்வதி, தற்போது அஜித் பால் இயக்கத்தில் வெளியாகவுள்ள STORM என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் விரைவில் ஒளிபரப்பாகவுள்ள இந்த சீரிஸ் தொடர்பான பேட்டி ஒன்றில், மெயின்ஸ்ட்ரீம் திரைப்படங்களின் தைரியமின்மை குறித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்னைக்குரிய படங்கள் குறித்து பார்வதி கண்டனம்

‘துரந்தர்’ போன்ற திரைப்படங்கள் சர்ச்சைக்குள்ளாகி வரும் நிலையில், இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பார்வதி, “இங்கு மெயின்ஸ்ட்ரீம் படங்களை விட, பிராந்திய மொழிப் படங்கள் மிகத் தைரியமான கதைகளைச் சொல்கின்றன” எனத் தெரிவித்தார். மெயின்ஸ்ட்ரீம் தயாரிப்பாளர்கள் பணத்தை முன்னிறுத்தி தைரியமான கதைகளை சொல்ல மறுப்பதை விநோதமாக பார்க்கிறேன் என்று கூறிய அவர், “உங்களிடம் பணம் இருக்கிறது. தைரியமான விஷயங்களைச் செய்ய வேண்டியவர்கள் நீங்கள். ஆனால், பெரிய பணபலம் இல்லாத நாங்கள் செய்கிறோம். கணக்கே தலைகீழாக இருக்கிறது” என்றார்.

முதலாளித்துவத்துக்கு இரையான திரைத்துறை

பார்வதி மேலும் கூறுகையில், “உங்களுக்குப் பேராசை இருப்பதால் நீங்கள் தைரியமாக இல்லை. முதலாளித்துவ அமைப்புக்கு நீங்கள் இரையாகிவிட்டீர்கள். உங்களுக்கு நிறைய பணம் வேண்டும், அதனால் கண்ணை மூடிக்கொண்டு மக்களைப் பாதிக்கும்படியான பிரச்னைக்குரிய படங்களை உருவாக்குகிறீர்கள். உருவாக்குங்கள், ஆனால் அந்த நினைப்புடனேயே வாழுங்கள்” என தயாரிப்பாளர்களை கேள்விக்குள்ளாக்கினார்.

பார்வையாளர்களின் பொறுப்பு

இத்தகைய படங்களுக்கு பார்வையாளர்களும் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்திய பார்வதி, “‘இதுபோன்ற மோசமான படங்களை நாங்கள் பார்க்க மாட்டோம்’ என உறுதியாகச் சொல்ல வேண்டும். பார்வையாளர்களிடம் இருக்கும் ஒரே வல்லமை, இத்தகைய படங்களுக்குச் செலவழிப்பதைத் தவிர்ப்பது” என்றார். மேலும், “இந்திய கலாசாரம் சிறந்தது எனச் சொல்லும் அதேவேளையில், சாதியமும் வாழ்க்கை முறையாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர்களுக்கு பார்வதியின் அறிவுரை

பிரச்னைக்குரிய படங்களில் இருந்து சம்பாதிக்கும் பணத்தின் மூலமாவது நல்ல படங்களை ஆதரிக்க தயாரிப்பாளர்கள் முன்வர வேண்டும் என பார்வதி வலியுறுத்தினார். “இதன்மூலம் உங்கள் ஆன்மாவின் ஒரு பகுதியையாவது சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள்” என்று அவர் ஆலோசனை கூறினார். இப்பேட்டி, தமிழ் திரைப்படத்துறையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

#பார்வதி #முதலாளித்துவம் #சினிமா #துரந்தர் #storm #தமிழ் சினிமா #actressParvathy #bollywood

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *