கன்னட சினிமாவில் பிரபலமான KVN தயாரிப்பு நிறுவனம் தற்போது மீண்டும் சான்றிதழ் சம்பந்தப்பட்ட சிக்கலை எதிர்கொண்டுள்ளது. பிரேம் இயக்கத்தில் துருவ் சார்ஜா நடித்த ‘KD: The Devil’ படத்தின் ட்ரெய்லர் யூட்யூபில் இருந்து நேற்று இரவு நீக்கப்பட்டது.
ட்ரெய்லர் நீக்கம் குறித்த விளக்கம்
இதுகுறித்து KVN நிறுவனம் வெளியிட்ட பதிவில், “சமீபத்தில் யூட்யூபில் வெளியிடப்பட்ட ‘KD: The Devil’ திரைப்படத்தின் ட்ரெய்லரில், கவனக்குறைவாக சில சான்றளிக்கப்படாத உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டிருந்தன. எனவே, நாங்கள் அந்த ட்ரெய்லரை நீக்கிவிட்டோம், மேலும் சான்றிதழ் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, திருத்தப்பட்ட பதிப்பை விரைவில் பதிவேற்றுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், “இந்தக் கவனக்குறைவுக்கு நாங்கள் மனப்பூர்வமாக வருந்துகிறோம், மேலும் அனைத்துச் சான்றிதழ் விதிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிப்பதில் உறுதியாக உள்ளோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.
முந்தைய சர்ச்சைகள்
ஏற்கெனவே ‘KD: The Devil’ படத்தின் இந்திப் பதிப்பு பாடலான ‘Sarke Chunar Teri Sarke’ வெளியாகி, அதிலிருந்த இரட்டை அர்த்த வரிகளால் சர்ச்சைக்குள்ளானது. பின்னர் அந்த பாடல் நீக்கப்பட்டது. அதற்கு முன்னர் யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘Toxic’ படத்தின் டீசர் வெளியாகி அதுவும் சர்ச்சையானது.
‘ஜனநாயகன்’ படத்தின் நிலை
KVN தயாரித்த விஜயின் ‘ஜனநாயகன்’ படம் சான்றிதழ் சிக்கல் காரணமாக இன்னும் வெளியாகவில்லை. சமீபத்தில் அந்த படம் சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இந்நிலையில் ‘KD: The Devil’ ட்ரெய்லர் நீக்கம் என KVN நிறுவனத்தைச் சுற்றி தொடர்ந்து சர்ச்சைகள் நீடிக்கின்றன.
KVN நிறுவனத்தின் படங்கள்
கணேஷ் நடித்த ‘Sakath’ மூலம் தயாரிப்பைத் தொடங்கிய KVN, கன்னடம் மட்டுமல்லாது தமிழில் விஜயின் ‘ஜனநாயகன்’, இந்தியில் சைஃப் அலிகான், அக்ஷய் குமார், அஜய் தேவ்கன் நடிக்கும் ‘Haiwaan’, மலையாளத்தில் சிதம்பரம் இயக்கியுள்ள ‘Balan: The Boy’, தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ‘Mega158’ ஆகிய படங்களை தயாரித்து வருகின்றனர்.

Leave a Reply