ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கூட்டுத் தாக்குதல் நடத்தின. இதையடுத்து, இஸ்ரேல் மீதும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீதும் ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தியது. மேலும், அரபிக்கடலில் உள்ள ஹர்மூஸ் ஜலசந்தி பகுதியை ஈரான் மூடியது. இதனால் சர்வதேச சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரானின் துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்தை அமெரிக்கா முடக்கியுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, பேச்சுவார்த்தைக்காக 2 வாரங்கள் போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார். அதன்படி கடந்த 8ம் தேதி முதல் போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள அமெரிக்கா திட்டமிட்டது. அதன்படி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
2-வது கட்ட பேச்சுவார்த்தை ரத்து
2 வார போர் நிறுத்த ஒப்பந்தம் கடந்த 22ம் தேதியுடன் நிறைவடைந்தது. ஆனால், ஈரான்-அமெரிக்கா இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பாகிஸ்தானில் நடைபெறவிருந்த 2ம் கட்ட பேச்சுவார்த்தை ரத்தானது. பேச்சுவார்த்தை ரத்தான போதும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். அதன்படி, மே 1ம் தேதி வரை போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்திற்குள் ஒப்பந்தம் மேற்கொள்ளுமாறும், இல்லாவிட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி இன்று பாகிஸ்தான் சென்றார். போர் நிறுத்தம் தொடர்பான 2ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக அமெரிக்க குழு ஏற்கனவே பாகிஸ்தான் சென்றுள்ளது. இதனால், பாகிஸ்தானில் அப்பாஸ் அராக்சி தலைமையிலான ஈரான் குழுவும், அமெரிக்க குழுவும் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க குழுவை அப்பாஸ் அராக்சி தலைமையிலான ஈரான் குழு சந்திக்கவில்லை. அதற்கு மாறாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீரை அப்பாஸ் அராக்சி சந்தித்தார்.
ஈரானின் நிலைப்பாடு
ஈரானின் நிலைப்பாடு குறித்து அப்பாஸ் அராக்சி பாகிஸ்தான் பிரதமர் மற்றும் ராணுவ தளபதியிடம் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க பேச்சுவார்த்தை குழுவை சந்திக்கவும் அப்பாஸ் அராக்சி மறுத்துவிட்டார். ஈரானின் நிலைப்பாடு குறித்து அப்பாஸ் அராக்சி தெரிவித்த கருத்துகளை பாகிஸ்தான் தரப்பு அமெரிக்காவிடம் தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த ஈரான் மறுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து புறப்பட்ட அப்பாஸ் அராக்சி ஓமன் மற்றும் ரஷியா ஆகிய நாடுகளுக்கு செல்ல உள்ளார்.
இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அப்பாஸ் அராக்சி பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் மத்திய கிழக்கின் பதற்றமான சூழ்நிலையை மேலும் அதிகரித்துள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தம் மே 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 3 வாரங்களில் ஈரானும் அமெரிக்காவும் ஒப்பந்தம் மேற்கொள்ளுமா என்பது தெளிவாகும்.

Leave a Reply