இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: நாளைக்குள் நல்ல செய்தி வருமென டிரம்ப் நம்பிக்கை

அமெரிக்கா-ஈரான் இடையே அறிவிக்கப்பட்ட 2 வார கால தற்காலிக போர் நிறுத்தம் நேற்று முடிவடைய இருந்தது. ஆனால் மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று ஈரானுடனான போர் நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

முக்கிய அறிவிப்புகள்

ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் காரணமாக 2-வது கட்ட பேச்சுவார்த்தையில் பங்கேற்க ஈரான் மறுத்து வரும் நிலையில் போர் நிறுத்த நீட்டிப்பை அமெரிக்கா அறிவித்தது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது:-

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளின் 2-ம் சுற்று தொடர்பாக நாளைக்குள் நல்ல செய்தி வெளியாகக்கூடும். ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு கால அவகாசம் எதுவும் இல்லை. எனது நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு ஒரு நல்ல ஒப்பந்தத்தைப் பெறுவதில் கவனம் செலுத்துகிறது.

ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிட்டுள்ளது என்பது குண்டுவீச்சை விட ஈரானை அதிகமாக அச்சுறுத்துகிறது. அவர்கள் பல ஆண்டுகளாகக் குண்டு வீச்சுக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆனால் இந்த முற்றுகையை அவர்கள் வெறுக்கிறார்கள்.

வெள்ளை மாளிகை விளக்கம்

இதற்கிடையே வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கரோலின் லெவிட் கூறும்போது, “ஈரானிடமிருந்து ஒரு முன்மொழிவைப் பெறுவதற்கு, அதிபர் டிரம்ப் எந்தக் காலக்கெடுவையும் நிர்ணயிக்கவில்லை. போர் நிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது டிரம்பிற்கு மட்டுமே தெரியும்.

ஹார்முஸ் ஜலசந்தியில் 2 கப்பல்களை ஈரான் கைப்பற்றியது போர் நிறுத்த விதிமீறல் அல்ல. அந்த கப்பல்கள் அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தொடர்புடையதல்ல. அவை சர்வதேசக் கப்பல்கள் என்பதால் இது போர் நிறுத்த விதிமுறைகளை மீறுவதல்ல. அதேவேளையில் ஈரானியப் படைகளின் இந்த கைப்பற்றல் நடவடிக்கை நாம் வெளிப்படையாகக் காணும் ஒரு கடற்கொள்ளை” ஆகும் என்றார்.

#அமெரிக்கா #ஈரான் #டிரம்ப் #ஹார்முஸ் ஜலசந்தி #போர் நிறுத்தம் #சர்வதேசம் #iranWar #donaldTrump

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *