இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ககன்யான் திட்டம் மிகப்பெரிய வெற்றியை நோக்கி நகர்ந்து வருகிறது. விமானப்படை வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு செல்ல முடியும் என்ற எண்ணத்தை மாற்றி, அடுத்த கட்டத்தில் பொது மக்களுக்கும் வாய்ப்பு அளிக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இரண்டாம் குழுவில் விமானப்படை அல்லாதோர்
ககன்யான் திட்டத்தின் முதல் கட்டமாக, இந்திய விமானப்படை வீரர்களான சுபான்ஷூ சுக்லா, பிரசாந்த் நாயகர், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் ஆகிய நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 2027ஆம் ஆண்டு விண்வெளிக்கு பயணம் மேற்கொள்வர். இதற்கான பல்வேறு சோதனைகள் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இரண்டாவது குழுவில் ராணுவம் மற்றும் விமானப்படை பின்னணி கொண்ட ஆறு விமானிகள் மற்றும் விமானப்படை அல்லாத நான்கு பேர் இடம்பெற உள்ளனர். இந்த நான்கு பேரும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பின்னணியை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
மூன்றாம் குழுவில் விமானப்படை அல்லாத 10 பேர்
மூன்றாவது குழுவில் மொத்தம் 12 பேர் இடம்பெறுவார்கள். இதில் விமானப்படை அல்லாத 10 பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று திட்டங்களையும் சேர்த்து மொத்தம் 26 பேர் விண்வெளிக்கு பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு பெறுவார்கள்.
நான்காம் பயணத்தில் முழுக்க முழுக்க பொதுமக்கள்
விண்வெளி ஆய்வு மேலும் விரிவடையும் நிலையில், நான்காவது பயணத்தில் இருந்து விமானப்படை அல்லாதவர்கள் மட்டும் தனியாக விண்வெளி பயணம் மேற்கொள்வர் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவது குழுவினர் 72 மாதங்களிலும், மூன்றாவது குழுவினர் 96 மாதங்களிலும் தயாராக வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் விண்வெளி ஆய்வில் இந்தியாவின் முன்னேற்றத்தையும், பொதுமக்களுக்கான வாய்ப்புகளையும் எடுத்துக்காட்டுகிறது.
