சென்னை: வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், விபத்துகளை தவிர்க்க, பட்டாசுகள் தயாரிப்புக்கான ரசாயன மூலப்பொருட்கள் கலவையை, காலை 6:00 மணியிலிருந்து 10:00 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.
புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு
தமிழகத்தில் கத்திரி வெயில் துவங்க உள்ள நிலையில், பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. கடந்த 19ம் தேதி விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டி கிராமத்தில் தனியார் பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் 25 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டு இருவர் உயிரிழந்தனர்.
இத்தகைய விபத்துகளை தடுக்க, வெடி மருந்து துறை என அழைக்கப்படும் மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு, தனியார் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
பாதுகாப்பு நடைமுறைகள்
இதுகுறித்து அதன் அதிகாரிகள் கூறியதாவது: பட்டாசுகள் தயாரிப்புக்கான ரசாயன மூலப்பொருட்கள் கலவை பணிகளை காலை 6:00 மணிக்கு தொடங்கி 10:00 மணிக்குள் முடித்து விட வேண்டும். காலை 11:00 மணியில் இருந்து மாலை 3:00 மணி வரை பட்டாசு தயாரிப்பு பணிகளில் தொழிலாளர்களை ஈடுபடுத்தக் கூடாது.
பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற வேண்டும். பட்டாசுகளை மொத்தமாக வாங்கும் நபர்களின் விபரங்கள், அடையாள அட்டைகளை பெற்று சேகரித்து வைத்திருக்க வேண்டும். இதை மீறினால் பட்டாசு தயாரிப்பு தொழிற்சாலைகளுக்கான உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
