மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி வாய்ப்பு தேசிய தேர்வுகள் முகமையால் (NTA) வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அந்தத் தேர்வு ரத்து செய்யப்பட்டது.
தேர்வு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விண்ணப்பக் கட்டணத்தை மாணவர்களுக்குத் திருப்பி வழங்க மத்திய கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. இதற்காகத் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, கட்டணத் திரும்பப் பெறுதல் செயல்முறைத் தொடங்கப்பட்டது. இருப்பினும், இந்த நடைமுறையில் பல்வேறு தொழில்நுட்பக் குளறுபடிகள் நிலவுவதாகப் பல மாணவர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
ஜூன் 30 வரை கால அவகாசம்
மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று, விண்ணப்பக் கட்டணத்தைத் திரும்பப் பெற வரும் ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கியுள்ளதாக தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. இது மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி வாய்ப்பு என்பதால், உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு விவரங்கள் பதிவு செய்ய அழைப்பு
இது தொடர்பாக தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை சுமார் 19 லட்சம் மாணவ, மாணவியருக்கு விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், இன்னும் கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்கள் தங்கள் வங்கி கணக்கு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே, தகுதியுள்ள மாணவர்கள் neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, அங்குள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தங்கள் வங்கி விவரங்களைப் பதிவு செய்து, கட்டணத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
