Tag: தொடங்கி வைக்கிறார்

  • அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: முதல்வர் விஜய் புதிய திட்டம் அறிமுகம்

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்: முதல்வர் விஜய் புதிய திட்டம் அறிமுகம்

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ என்ற புதிய திட்டத்தை முதல்வர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ளார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    தமிழர் பண்பாட்டு மரபை முன்னிறுத்தும் திட்டம்

    தமிழர் பாரம்பரியத்தில் தாய்மாமன் வழங்கும் சீர் என்ற கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு, மாநில முதல்வரே தாய்மாமனின் பொறுப்பை ஏற்று, அன்பின் அடையாளமாக ஒரு கிராம் தங்க மோதிரத்தை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

    தாய் மற்றும் சேய்களின் நலனை மேம்படுத்துவதில் தமிழக அரசு அதிக முன்னுரிமை அளித்து வருகிறது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி, இலவச பிரசவம், ஊட்டச்சத்து அளித்தல் மற்றும் குழந்தைகளின் கூட்டு கண்காணிப்பு மென்பொருள் (PICME) போன்ற திட்டங்களின் தொடர்ச்சியாக இத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

    திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி ஒதுக்கீடு

    தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சார்ந்த, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் இத்திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ஆண்டுதோறும் ரூ. 755.83 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்த புள்ளிகளை உடனடியாகக் கோருமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

    தொடங்கும் தேதி மற்றும் காலக்கோடு

    இந்த திட்டத்தின் கீழ் 2026-ம் ஆண்டு ஜூன் மாதம் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் பயன்பெறுவார்கள். அதிகாரப்பூர்வமாக இத்திட்டத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த தினமான 2026-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்.

    அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சுகாதார சேவைகளின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதோடு, தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் நோக்கத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    தொடர்புடைய செய்திகள்

    #tamilnadugovernment #cmvijay #healthscheme #welfare #சென்னை #தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் #முதல்-அமைச்சர் விஜய் #தொடங்கி வைக்கிறார் #அரசாணை வெளியீடு #chennai