ஜம்மு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் அமைந்துள்ள அமர்நாத் குகை ஆலயத்தில், இயற்கையாகத் தோன்றும் பனி லிங்கத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான புனித யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இந்த புனிதப் பயணத்தின் சிறப்பை விளக்கி, யாத்திரையாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஒரு சிறப்பு வழிகாட்டுதல் கடிதத்தை எழுதியுள்ளார். இதில், அமர்நாத் யாத்திரை என்பது வெறும் மதப் பயணமாக மட்டுமில்லாமல், இந்தியாவின் வேற்றுமையில் ஒற்றுமையை உலகிற்கு உணர்த்தும் ஒரு பயணமாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ என்ற உணர்வைப் பிரதிபலிக்கும் இப் பயணத்தில், பக்தர்களை அன்புடன் உபசரிக்கும் ஜம்மு காஷ்மீர் மாநில மக்களின் மனப்பான்மையை பிரதமர் தனது கடிதத்தில் வெகுவாகப் பாராட்டியுள்ளார். யாத்திரை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் ராணுவம், காவல்துறை, பேரிடர் மீட்புக் குழுக்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் அர்ப்பணிப்புக்கு அவர் நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
பக்தர்களுக்கான ஐந்து முக்கிய அறிவுறுத்தல்கள்
யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய ஐந்து முக்கியமான நடைமுறைகளை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். குறிப்பாக இமயமலைப் பகுதியின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
முதலில், புனிதப் பாதைகளின் தூய்மையை உறுதி செய்து, இயற்கையின் அழகை சிதைக்காமல் பாதுகாக்க வேண்டும். இரண்டாவதாக, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நிர்வாகத்தினரால் வழங்கப்படும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.
மூன்றாவதாக, ஜம்மு காஷ்மீர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அங்குள்ள உள்ளூர் தயாரிப்புகளை வாங்கி வணிகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும். நான்காவதாக, புனிதப் பயணத்தை முடித்து வீடு திரும்பிய பிறகு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அன்புக்குரியவர்களின் நினைவாக ஒரு மரக்கன்றை நட வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, இந்தப் புனிதப் பயணத்தின் வழியில் அனைத்து மக்களிடமும் ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்க உணர்வை ஊக்குவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கடுங்கமான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வரும் இந்த யாத்திரை, வரும் ஆகஸ்ட் மாதம் 28-ஆம் தேதி நிறைவடைகிறது.
