தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், மாநில முதலமைச்சருமான விஜய் தலைமையில் தோழமைக் கட்சிகளுக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. அரசியல் களத்தில் அடுத்தகட்ட நகர்வுகளைத் திட்டமிடும் நோக்கில் இந்த முக்கியக் கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், மதிமுகத் தலைவர் வைகோ, ஐயூஎம்எல் கட்சித் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மூன்று நிலைகளில் கூட்டணி திட்டமிடல்
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், ஆலோசனைக் கூட்டத்தின் போக்கு நேர்மறையாக இருந்ததாகத் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தோழமை கட்சிகளை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அதனை மூன்று நிலைகளாகப் பிரித்துப் பார்க்க இருப்பதாக அவர் விளக்கினார். ஆதரவு அளிக்கும் கட்சிகள், ஆதரவில் பங்குபெற்ற கட்சிகள் மற்றும் முழுமையான கூட்டணி அமைப்பதற்கான நிலைகள் என மூன்று பிரிவுகளில் திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் தலைவர்களும் தங்களது கருத்துக்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டதாகத் தெரிவித்தார்.
பெயர் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு
கூட்டணியின் பெயர், பொது நிகழ்ச்சி நிரல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது குறித்த விவரங்கள் அடுத்த ஆலோசனைக் கூட்டத்தில் விவரிக்கப்படும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வருகை தரும் தருணத்தில், இந்தியா கூட்டணி குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
