திருநெல்வேலி மாநகரின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான பாளையங்கோட்டை சந்தை வளைவு, மாலை நேரங்களில் வாகனங்களின் கடும் நெரிசலுக்கும், இடைவிடாத ஒலிபெருக்கி சத்தங்களுக்கும் சாட்சியாக இருக்கும். இத்தகைய சூழலில், எந்தவித ஊதியமும் எதிர்பாராமல், கடந்த மூன்று ஆண்டுகளாகத் தன்னார்வலராக நின்று போக்குவரத்தைச் சீரமைத்து வருகிறார் 50 வயதான ஆறுமுகம்.
பிறவியிலேயே காது கேளாத மற்றும் பேச இயலாத மாற்றுத்திறனாளியான ஆறுமுகம், சைகை மொழியின் மூலமாகவே வாகனங்களை ஒருங்கிணைத்து விபத்துகள் இல்லாது போக்குவரத்தை வழிநடத்தி வருகிறார். இவருடைய இந்தத் தன்னலமற்ற சேவைக்குக் பின்னால் ஒரு வலிமிகுந்த குடும்ப வரலாறு உள்ளது.
தந்தையின் மரணம் ஏற்படுத்திய மனமாற்றம்
ஆறுமுகத்தின் சகோதரர் சரவணன் கூறுகையில், “2004-ஆம் ஆண்டு சீவலப்பேரி சாலை அண்ணாநகர் மேம்பாலத்தில் நடந்த ஒரு விபத்தில் எங்கள் தந்தை உயிரிழந்தார். அவர் ஒரு வனத்துறை அலுவலராகப் பணியாற்றி வந்தார். எதிரே வந்த காரும் மோதி அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். அப்போது ஆறுமுகத்திற்கு 25 வயது. தந்தையின் அந்த மரணம் அவரை மனதளவில் வெகுவாக பாதித்தது. இனி ஒரு உயிரும் விபத்தினால் இழக்கப்படக்கூடாது என்ற எண்ணமே இன்று அவரைத் தெருவில் நின்று சேவை செய்யத் தூண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.
ஆறுமுகம் தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைக் கடந்தவர். கட்டிட வேலை மற்றும் பெயிண்டிங் பணிகளுக்குக் கூலிக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய இவர், மிகுந்த சுறுசுறுப்புடன் செயல்படுபவர். குறிப்பாக, பேருந்து அல்லது பிற வாகனங்களில் பயணிக்க விரும்பாத இவர், திருச்செந்தூர் வரை தனது மிதிவண்டியில் பயணிக்கக்கூடிய உடல் வலிமை கொண்டவர்.
குடும்பத்தினரின் ஆதரவும் சமூக அங்கீகாரமும்
ஆறுமுகத்தின் இந்த அர்ப்பணிப்பு தொடக்கத்தில் குடும்பத்தினருக்குப் புரியவில்லை. “வீட்டிலேயே இருக்கும்படி பலமுறை கூறினோம். ஆனால், இந்தச் சேவையில் தான் அவருக்கு மனநிறைவு கிடைக்கிறது என்பதை உணர்ந்த பிறகு நாங்களும் ஆதரவு அளித்தோம். மற்றவர்களுக்கு நல்லது செய்கிறானே என்று அம்மாவும் மனதளவில் ஏற்றுக்கொண்டார்” என்று சரவணன் குறிப்பிட்டார்.
தினமும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை சாலைகளில் பணியாற்றும் ஆறுமுகத்தின் சேவையைப் பாராட்டி, நெல்லை ரோட்டரி கிளப் சார்பில் அவருக்குப் புதிய மிதிவண்டி வழங்கப்பட்டது. மேலும், திருநெல்வேலி மாநகரக் காவல்துறை ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இவரை நேரில் பாராட்டி, அவருக்குத் தேவையான தொப்பி மற்றும் அங்கிகளை வழங்கி கௌரவித்துள்ளனர்.
உதவிகளை ஏழைகளுக்குப் பகிரும் பண்பு
போக்குவரத்தைச் சீரமைப்பதோடு மட்டுமின்றி, மற்றவர்களுக்கு உதவும் பண்பும் இவரிடம் இயல்பாக உள்ளது. ரம்ஜான், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலங்களில் பொதுமக்கள் அன்பளிப்பாக வழங்கும் உணவுப் பொருட்களைத் தான் உட்கொள்ளாமல், அவற்றை தனது மிதிவண்டியில் ஏற்றிச் சென்று கிராமப்புறங்களில் பசியால் வாடும் ஏழைகளுக்கு வழங்குகிறார் ஆறுமுகம். ஒரு தனிமனிதனின் மனஉறுதி மற்றும் சமூக அக்கறை எப்படி ஒரு நகரின் போக்குவரத்திற்கு உதவ முடியும் என்பதற்கு ஆறுமுகம் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்.
