Tag: suddenly death

  • ஈரோடு தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

    ஈரோடு தனியார் மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தை உயிரிழப்பு: போலீஸார் விசாரணை

    ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவித்த பச்சிளம் குழந்தை, பிறந்த ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சேலம் மாவட்டம் சங்ககிரி கஸ்தூரி நகரைச் சேர்ந்த அருள்ஜோதி என்பவர் தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடன் மனைவி ரேவதி மற்றும் நான்கு வயது பெண் குழந்தை உள்ளனர். ரேவதி மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில், கடந்த மாதம் 19-ஆம் தேதி மாலை பிரசவ சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சிகிச்சைக்குப் பிறகு, நேற்று முன்தினம் காலை ரேவதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. தாயும் குழந்தையும் நலமாக இருந்ததால், அவர்கள் சிகிச்சைக்கான தனி அறைக்கு மாற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று அதிகாலை குழந்தையின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதை கவனித்த குடும்பத்தினர், குழந்தை மூச்சுவிடாமல் மயக்க நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர்.

    உடனடியாக மருத்துவமனை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்தபோது, குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். மருத்துவமனை நிர்வாகத்தின் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு அரசு மருத்துவமனை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    போலீஸார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும்போது தவறு நடந்ததா அல்லது இயற்கையான காரணங்களால் குழந்தை உயிரிழந்ததா என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தையின் மரணத்தால் அந்த குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

    #erodeNews #medicalNegligenceInvestigation #tamilNaduNews #ஈரோடு #பிறந்த குழந்தை #திடீர் சாவு #erode #newBornBaby #suddenlyDeath