நடிகர் பரத் நடிப்பில், ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி கவனத்தைப் பெற்ற திரைப்படம்தான் காளிதாஸ் 2. இந்தத் திரைப்படம் தற்போது சர்வதேச அளவில் ஒரு முக்கிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ஷாங்காய் திரைப்பட விழாவில் தேர்வு
ஆசியாவிலேயே மிகப்பெரிய திரைப்பட விழாக்களில் ஒன்றாகக் கருதப்படும் 28-வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் (SIFF 2026), திரையிடப்படுவதற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக காளிதாஸ் 2 இடம்பெற்றுள்ளது. சீனாவின் ஷாங்காய் நகரில் ஜூன் 12 முதல் 21 வரை இந்த விழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ஜூன் 28 வரை நகரின் பல்வேறு திரையரங்குகளில் சிறப்புத் திரையிடல்கள் மேற்கொள்ளப்பட்டன.
தென்னிந்தியாவிலிருந்து ஒரே திரைப்படம்
உலகெங்கிலும் உள்ள திரைப்பட இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் பெருமளவில் பங்கேற்கும் இந்த சர்வதேச நிகழ்வில், இந்தியாவிலிருந்து ஏழு திரைப்படங்கள் தேர்வாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் தென்னிந்தியாவிலிருந்து தேர்வான ஒரே திரைப்படமாக காளிதாஸ் 2 உருவெடுத்துள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இதில், அஜய் கார்த்தி, சங்கீதா, பவானி ஸ்ரீ மற்றும் அபர்ணிதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். திரைப்படத்தின் கதைக்களம் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தி காரணமாகவே இந்த சர்வதேசத் தேர்வில் இடம் பெற்றதாகத் தெரிகிறது.
