தாய்லாந்து அரசு இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 60 நாட்கள் இலவச விசா சலுகையை ரத்து செய்துள்ளது. அந்நாட்டு அமைச்சரவை கடந்த மே 19, 2026 அன்று கூட்டமமைந்து, விசா விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய விசா நடைமுறைகள்
இந்த புதிய கொள்கை அமலுக்கு வரும்போது, இந்தியப் பயணிகள் மீண்டும் பழைய நடைமுறையான ‘விசா ஆன் அரைவல்’ முறைக்குத் திரும்புவார்கள். தாய்லாந்து அரசின் அதிகாரப்பூர்வ இதழான ராயல் கெஜட்டில் இந்த அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குப் பிறகு புதிய விதிகள் நடைமுறைக்கு வரும். அதுவரை தற்போதைய இலவச விசா முறையே தொடரும்.
புதிய விதிகளின்படி, இந்தியர்கள் தாய்லாந்து நாட்டுக்குள் நுழைய விசா பெறுவது கட்டாயமாகும். விமான நிலையத்திலேயே நேரடியாக விசா பெற வேண்டும். இவ்வாறு விசா பெற்றவர்கள் தொடக்கத்தில் 15 நாட்கள் மட்டுமே தங்குவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். இந்த கால அவகாசம் பின்னர் 30 நாட்களாக உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செலவும் காரணங்களும்
இலவச விசா திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்தியப் பயணிகள் மீண்டும் விசா கட்டணத்தைச் செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு விசா ஆன் அரைவல் முறைக்கு 2,000 தாய் பாட் (இந்திய மதிப்பில் சுமார் ₹6,000) வசூலிக்கப்பட்டது. இதனால் கோடை விடுமுறைக்காக தாய்லாந்து செல்ல திட்டமிட்டுள்ள பயணிகளுக்கு கூடுதல் நிதிச் சுமை ஏற்படும்.
இந்த முடிவுக்குப் பின்னால் உள்ள காரணங்களாக தாய்லாந்து அரசு சில முக்கியக் குறிப்புகளை முன்வைத்துள்ளது. இலவச விசா திட்டத்தைப் பயன்படுத்திப் பலர் அந்நாட்டில் சட்டவிரோதமாக வேலை செய்வது, போலி நிறுவனங்களை இயக்குவது மற்றும் சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற புகார்கள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தரமான சுற்றுலா பயணிகளுக்கான முன்னுரிமை
இது குறித்து தாய்லாந்து சுற்றுலாத்துறை அமைச்சர் சுராசக் பன்சரோன்வோராகுல் கூறுகையில், “அரசாங்கம் இனி வெறும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மட்டும் நம்பியிருக்காமல், தரமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறது” என்று விளக்கமளித்தார்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் “ஒரு நாடு, ஒரே விசா விலக்கு சலுகை” என்ற புதிய கொள்கையை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, விசா விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளின் எண்ணிக்கை 57-லிருந்து 54-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்தியா, அஜர்பைஜான், பெலாரஸ் மற்றும் செர்பியா ஆகிய நான்கு நாடுகள் மட்டுமே இனி விசா ஆன் அரைவல் பட்டியலில் இடம்பெறும்.
தற்போதைய அறிவிப்பால், ஏற்கனவே பழைய விதிகளின் கீழ் தாய்லாந்து சென்று தங்கியிருப்பவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்களுக்கான கால அளவு முடியும் வரை அங்கேயே தங்குவதற்கு அனுமதி உண்டு.
விசா நடைமுறைகள் மற்றும் இறுதித் தேதிகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு, இந்தியாவிலுள்ள தாய்லாந்து தூதரகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைக் கண்காணிக்குமாறு தாய்லாந்து சுற்றுலா வாரியம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.







