புதுக்கோட்டை மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயனாளிகளின் விவரங்களை மேம்படுத்தும் நோக்கில், குடும்ப அட்டை உறுப்பினர்களின் கைவிரல் ரேகை பதிவுப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப்பதிவுப் பணியை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உரிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
கைவிரல் ரேகை பதிவு விவரங்கள்
மாவட்டத்திலுள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் இந்த பதிவுப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை தனது கைவிரல் ரேகையை பதிவு செய்யாத குடும்ப அட்டை உறுப்பினர்கள், வரும் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26-ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்குச் சென்று பதிவுகளை நிறைவு செய்ய வேண்டும்.
வெளிஊரில் வசிப்பவர்களுக்கான வசதி
பணி நிமித்தமாகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ தற்காலிகமாக வெளியூர்களில் வசித்து வரும் குடும்ப அட்டை உறுப்பினர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவர்கள் தாங்கள் தற்போது வசிக்கும் இடத்திற்கு அருகிலுள்ள நியாயவிலைக் கடைக்குச் சென்று, ஜூன் 26-ஆம் தேதிக்குள் கைவிரல் ரேகையை பதிவு செய்து தனது உரிமையை உறுதி செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இறந்த உறுப்பினர்களின் பெயர் நீக்கம்
குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில், தற்போது உயிரிழந்திருப்பவர்களின் பெயர்களை நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தை அணுகி, ஜூன் 26-க்குள் பெயர் நீக்கத்திற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளைத் தடையின்றித் தொடரவும், எதிர்காலத்தில் ரேஷன் கார்டு தொடர்பான சிக்கல்களைத் தவிர்க்கவும் அனைத்து உறுப்பினர்களும் இந்த காலக்கெடுவிற்குள் பதிவுகளை முடிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
