தமிழகத்தில் 2026-ம் ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை செயல்முறையின் முக்கிய கட்டமான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் இன்று வெளியிட்டார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் உள்ள சுமார் 2 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான இந்த செயல்முறை ஒற்றைச் சாளர முறையில் நடைபெற்று வருகிறது.
மதிப்பெண்கள் மற்றும் மாணவர்களின் விவரங்கள்
இம்முறை வெளியாகி உள்ள தரவரிசைப் பட்டியலில் மொத்தம் 2,36,017 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் மாணவவர்களின் எண்ணிக்கை 1,05,246 ஆகவும், மாணவர்களின் எண்ணிக்கை 1,30,767 ஆகவும் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அக்சிதா என்ற மாணவி மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
தரவரிசைப் பட்டியலில் 53 மாணவர்கள் 200-க்கு 200 என்ற முழுமையான கட்-ஆப் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர் என்ற செய்தியை அமைச்சர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மாணவர்கள் தங்களது தரவரிசை எண்களை tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
குறைதீர்ப்பு கால அவகாசம்
வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலில் ஏதேனும் தவறுகள் அல்லது விடுபடல்கள் இருப்பின், அதனைச் சரிசெய்வதற்கான குறைதீர்ப்பு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜூலை 5-ம் தேதி வரை மாணவர்கள் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.
இது குறித்து அமைச்சர் மேலும் கூறுகையில், “தங்கள் பெயர்கள் விடுபட்டிருந்தாலோ அல்லது தரவரிசையில் ஏதேனும் குளறுபடி இருந்தாலோ, மாணவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை சேவை மையங்களை அணுகித் தீர்வு காணலாம். ஜூலை 6-ம் தேதிக்குள் அனைத்துத் திருத்தங்களும் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு சிறப்புப் பொறியியல் பிரிவுகளுக்கு இந்தத் தரவரிசையின் அடிப்படையிலேயே கலந்தாய்வு மூலம் இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
