ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மேகன் ஷட், வரவிருக்கும் 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரைத் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணியின் வெற்றிப் பயணத்தில் முக்கிய தூணாக விளங்கிய அவருக்கு, இந்த உலகக் கோப்பை தொடர் தனது இறுதிப் பயணமாக அமையும்.
14 ஆண்டுகால சாதனப் பயணம்
2012-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான மேகன் ஷட், ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய மூன்று வகையான போட்டிகளிலும் சேர்த்து 240 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தம் 309 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உலகத் தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளராக அங்கீகரிக்கப்பட்டார்.
வெற்றிக்கான தாகமும் இலக்கும்
தனது ஓய்வு மற்றும் உலகக் கோப்பை இலக்கு குறித்துப் பேசிய மேகன் ஷட், இந்தத் தொடரில் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற தீவிரமான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார். “இந்த உலகக் கோப்பையை வெல்வதற்கு என்னிடம் இருக்கும் ஒரே உணர்வு பசி தான். கடந்த இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் ஏற்பட்ட ஏமாற்றங்கள் என்னை ஆழமாக பாதித்தன. பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், அந்தத் தோல்விகள் இன்னும் மனதிற்குள் இருக்கின்றன. இந்த முறை எப்படியாவது கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைமுறைக்கு வழிவிடும் நேரம்
தொடர்ந்து பேசிய அவர், தனது ஓய்வு முடிவின் அவசியத்தை விளக்கி, “நான் எதையும் முன்கூட்டியே திட்டமிடுபவர் அல்ல. ஆனால், ஒரு கட்டத்தில் இறுதி முடிவை எடுக்க வேண்டிய நேரம் வரும். அதற்கான சரியான தருணத்தை இப்போது உணர்கிறேன். அடுத்த ஐசிசி தொடரில் நான் பங்கேற்பதாகத் தோன்றவில்லை. எனது காலம் நிறைவடைந்துவிட்டது; இனி அடுத்த தலைமுறையினர் பொறுப்பேற்க வழிவிடுவதுதான் முக்கியம்” என்று கூறினார்.
ஆஸ்திரேலிய அணியின் வியூகம்
மகளிர் டி20 உலகக் கோப்பையில் ஏற்கனவே 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணி, தற்போது 7-வது முறையாகக் கோப்பையை வெல் என்ற இலக்குடன் உள்ளது. அனுபவ வீரர்களையும் இளம் வீரர்களையும் உள்ளடக்கிய வலுவான அணியுடன் ஆஸ்திரேலியா களமிறங்குகிறது. மேகன் ஷட்டுக்கு ஒரு வெற்றிகரமான பிரியாவிடையை அளிப்பதே அணியின் முதன்மை நோக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த உலகக் கோப்பைத் தொடரின் முதல் லீக் போட்டியில், ஜூன் 13-ம் தேதி ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியுடன் மேகன் ஷட்டின் கடைசி உலகக் கோப்பைப் பயணம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

