Tag: cango

  • காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை

    காங்கோ உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டாம்: இந்திய அரசு எச்சரிக்கை

    மத்திய ஆப்பிரிக்கப் பகுதிகளில் எபோலா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழலில், இந்தியக் குடிமக்கள் காங்கோ மற்றும் உகாண்டா போன்ற நாடுகளுக்குத் திட்டமிட்டுள்ள பயணங்களைத் தவிர்க்குமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

    உலக சுகாதார அமைப்பு, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வரும் எபோலா நோய்த்தொற்றை சர்வதேச அளவிலான பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தியாவிலும் வைரஸ் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    மாநிலங்களுக்கான வழிகாட்டுதல்கள்

    எபோலா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் நாட்டின் தயார்நிலையினை மதிப்பீடு செய்ய, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத் துறை செயலாளர்கள் பங்கேற்றனர்.

    நாட்டின் எல்லைக் கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் விமான நிலையங்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும் என்றும், ஏதேனும் சந்தேகத்திற்குரிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகத் தெரிவிக்குமாறும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை

    குறிப்பாக காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளுக்கு அத்தியாவசியத் தேவையின்றி பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கனவே அந்த நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டவர்கள், உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள் மற்றும் தனிமைப்படுத்தும் வார்டுகளின் வசதிகளை உறுதி செய்ய மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களின் உடல்நிலை குறித்த ஆய்வுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    #healthNews #internationalTravel #ebolaOutbreak #centralGovernment #ebolaVirus #cango #travel #centralGovt #எபோலா வைரஸ் #காங்கோ