Tag: Bangladeshi infiltrators

  • மேற்கு வங்கத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்களை நேரடியாக நாடு கடத்தும் புதிய நடைமுறை அமல்

    மேற்கு வங்கத்தில் வங்கதேச ஊடுருவல்காரர்களை நேரடியாக நாடு கடத்தும் புதிய நடைமுறை அமல்

    மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவி வரும் வங்கதேசக் குடிமக்களைக் கையாளுவதில் கடுமையான புதிய நடைமுறையை அம்மாநில அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இனி பிடிபடும் ஊடுருவல்காரர்கள் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படும் நீண்ட கால நடைமுறைகளைத் தவிர்த்து, நேரடியாக எல்லை பாதுகாப்பு படையினரிடம் (BSF) ஒப்படைக்கப்பட்டு அவர்களது தாய்நாட்டிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்று மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    நேரடி நாடு கடத்தல் முறை

    இதுவரை ஊடுருவல்காரர்கள் பிடிப்பட்டால் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதே வழக்கமாக இருந்தது. ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய விதியின்படி, பிடிபடும் நபர்கள் உடனடியாக எல்லை பாதுகாப்பு படை வீரர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள். “கண்டறி, நீக்கு, வெளியேற்று” என்ற விரிவான திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக முதல்வர் சுவேந்து அதிகாரி விளக்கமளித்துள்ளார்.

    முன்னதாக மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு புகலிடம் வழங்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் மாநில நிர்வாகம் மாறிய நிலையில், ஊடுருவலைத் தடுக்கவும், அங்கிருப்பவர்களை வெளியேற்றவும் அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    சட்டப் பின்னணி மற்றும் தொழில்நுட்பக் கண்காணிப்பு

    இந்த நடவடிக்கைக்கு அடிப்படையாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025 பயன்படுத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. இந்தச் சட்டம் நவீன தொழில்நுட்பக் கண்காணிப்பு மற்றும் விரைவான நாடு கடத்தல் நடைமுறைகளை உள்ளடக்கியுள்ளது. இதன் மூலம் எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    மதரஸாக்களில் ‘வந்தே மாதரம்’ கட்டாயம்

    ஊடுருவல் தடுப்பு நடவடிக்கையுடன் சேர்த்து, மாநிலத்தில் கல்வி சார்ந்த புதிய மாற்றத்தையும் அரசு கொண்டு வந்துள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து மதரஸா பள்ளிகளிலும் காலை வழிபாட்டு கூட்டங்களின் போது “வந்தே மாதரம்” பாடலைப் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவை மாநில அரசு பிறப்பித்துள்ளது.

    அரசு நிதி உதவி பெறும் மதரஸாக்கள், அங்கீகரிக்கப்பட்ட சிசு சிக்ஷா மற்றும் மத்யமிக் சிக்ஷா கேந்திர மையங்கள் அனைத்திற்கும் இந்த விதி பொருந்தும் என்று மதரஸா கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. காலை வழிபாட்டின் போது ஒரே மாதிரியான தேசப்பற்று உணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பதே இந்த முடிவின் நோக்கம் என கல்வி இயக்கக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இந்த உத்தரவை முறையாக அமல்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பள்ளி ஆய்வாளர்களுக்கும் மற்றும் மதரஸா கல்வி வாரியத்திற்கும் அரசாணைகள் அனுப்பப்பட்டுள்ளன. முன்னதாக மாநில அரசு பள்ளிகளில் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது மதரஸாக்களிலும் இது விரிவாக்கப்பட்டுள்ளது.

    தொடர்புடைய செய்திகள்

    #westBengal #bangladesh #bsf #politicalNews #educationPolicy #வங்கதேச ஊடுருவல்காரர்கள் இனி நாடு கடத்தப்படுவது உறுதி #மே.வங்கத்தில் புதிய விதியை அமல்படுத்தியது பா.ஜ. #அரசு #bangladeshiInfiltrators #bjpGovernment